ACJU தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஐ.நா சமூக மன்றத்தில் பங்கேற்பு : பலஸ்தீன் காஸா தொடர்பில் ஐ.நா பொதுச்சபை மேற்கொண்ட தீர்மானத்தை பாராட்டி அதன் செயலாளர் நாயகத்திடம் கடிதம் கையளிப்பு

2023.11.04 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவிற்கு குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐ.நா வின் சமூக மன்றத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்கள்.

மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுவதும் சமூக நீதியும் சகவாழ்வும் நிலைநாட்டப்படுவதும் இணக்கமான உலகிற்கு இன்றியமையாத தூண்களாகும் என்பதை வலியுறுத்தும் வகையில் குறித்த உரை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்லின சமூகங்கள் மற்றும் மத, கலாசார, நம்பிக்கைகளுக்கு மத்தியில் சகிப்புத்தன்மை, பரஸ்பர உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய அவர், சிக்கலான உலகில் பல்லின சமூகங்களுக்கிடையே புரிதல் மற்றும் அமைதியை மேம்படுத்துவதில் ஜம்இய்யா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பணிகளையும் குறிப்பிட்டுக் காட்டினார்கள்.

இந்நிகழ்வில் 2023.10.26 அன்று ஐ.நா பொதுச்சபையினால் பலஸ்தீன் காஸா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட உடனடி மற்றும் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானத்தைப் பாராட்டி ஐ.நா வின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுக்கு ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ கடிதம் கையளிக்கப்பட்டது.

சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச, மனிதாபிமான மனித உரிமைச் சட்டங்களை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு காஸாவில் மனிதாபிமான பணிகள், வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் உறுதிப்படுத்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதாக குறித்த தீர்மானம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா வின் தலைமையகத்தில் உள்ள பள்ளிவாயலில் கடந்த 2023.11.03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜுமுஆ பிரசங்கமானது ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் அவர்களால் நடாத்தப்பட்டமை குறித்த விஜயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்தது.

குறித்த ஜுமுஆ பிரசங்கமானது அமைதி, நீதி, இரக்கம் ஆகிய இஸ்லாத்தின் விழுமியங்களை அடையாளப்படுத்துவதாகவும் உலகளாவிய முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் அழுத்தங்களை குறிப்பிட்டுக் காட்டுவதாகவும் இருந்நது. ஜெனீவாவில் அமைந்துள்ள UHRC அமைப்பின் தலைவர் சகோதரர் முயிஸ் வஹாப்தீன் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன