2026 ஏப்ரல் 22ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் – உம்ரா குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், பதிவு செய்யப்பட்ட ஹஜ் குழுக்களின் வழிகாட்டிகளாக செல்லக்கூடிய ஆலிம்களுக்கான விசேட ஹஜ் வழிகாட்டல் நிகழ்வு, கொழும்பு – மென்டரினா ஹோட்டலில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள 90க்கும் மேற்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, இம்முறை வழிகாட்டிகளாக செல்லவுள்ள ஆலிம்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அஷ்-ஷைக் அப்துல்லாஹ் உவைஸ் அவர்களால் அல்-குர்ஆன் கிராஅத் ஒதப்பட்டது.
கிராஅத்தினை அடுத்து, நிகழ்விற்கு வருகை தந்தவர்களை வரவேற்கும் முகமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கௌரவப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடுத்து, ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் மிஹ்லார் அவர்கள் ஹஜ் கடமைக்காக செல்பவர்கள் அங்கு கடைபிடிக்க வேண்டிய சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் குறித்து தெளிவுகளை வழங்கியதுடன் ஹஜ் குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தார்.
அதனையடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஹஜ்ஜின் சிறப்புகள் குறித்து தெளிவுகளை வழங்கியதுடன் ஹஜ்ஜுடைய விடயத்தில் வழிகாட்டிகளாக செல்லக் கூடியவர்கள் கருத்து வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, உரையாற்றிய ஃபத்வாக் குழுவின் பதில் செயலாளர் எம்.ரீ.எம். சல்மான் அவர்கள், ஹஜ் முகவர்கள் மற்றும் வழிகாட்டிகளாக உள்ளவர்கள் ஆன்மீக ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் ஹஜ்ஜின் மகத்துவம் குறித்தும் சுட்டிக் காட்டினார்.
அடுத்ததாக, ஜம்இய்யாவின் ஃபத்வாக் குழுவின் உறுப்பினர் முஃப்தி கே.எச்.எம்.ஏ. மபாஸ் அவர்கள், ஹஜ் வழிகாட்டிகளாக செல்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஹஜ்ஜின் முக்கிய கிரியைகள் குறித்த தெளிவுகளை விளக்கக் காட்சிகளுடன் முன்வைத்து உரையாற்றினார்.
இதன்போது, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஆலிம்கள், ஹஜ் தொடர்பிலான தமது சந்தேகங்கள் மற்றும் நடைமுறை விடயங்கள் குறித்த கேள்விகளை முன்வைத்ததுடன் அவற்றிற்கான தெளிவுகளையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, ஹஜ் யாத்திரிகளுக்கான முக்கிய சுகாதார நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் எனும் தலைப்பில் வைத்தியர் ஷிஹான் அவர்கள் பல்வேறு சுகாதார ஒழுங்குகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
இதில், கலந்துகொண்டு பயன்பெற்ற அனைத்து ஆலிம்களுக்கும் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





– ACJU Media –



