‘முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்தல்’ எனும் தொனிப்பொருளில் அரச தரப்புக்கும் ஜம்இய்யா உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற 03ஆம் கட்ட சந்திப்பு

2025 ஆகஸ்ட் 26ஆம் திகதி, முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்த்தல் எனும் தொனிப்பொருளில் அரச தரப்புக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட ஏனைய முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான 03ஆம் கட்ட கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது.

கடந்த ஜூன் 26 அன்று இடம்பெற்ற 02ஆம் கட்ட ஒன்றுகூடலின் தொடர்ச்சியாக இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏனைய முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் முஸ்லிம் ஜனாஸாக்களின் பிரேத பரிசோதனை விவகாரம், முஸ்லிம் தாதியர் சீருடை, ஏகல, மஹர பள்ளிவாசல், அல்குர்ஆன் இறக்குமதி விவகாரம், சூபி முஸ்லிம்கள் விவகாரம் போன்ற சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வுகளை பெற்றுத் தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் அரசாங்கம் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் அஷ்-ஷெய்க் கெளரவ முஹம்மத் முனீர் முளப்பர், ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஷில், தேசிய சூறா சபை, அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அர்கம் இல்யாஸ், எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் பஸ்மின் சரீப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன