2025 ஒக்டோபர் 05 தொடக்கம் 19ஆம் திகதி வரை, மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் மலேசிய இஸ்லாமிய பயிற்சி நிறுவனம் (ILIM) மற்றும் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன இணைந்து நடாத்திய ‘இஸ்லாமிய நிர்வாகமும் முகாமைத்துவமும்’ எனும் தலைப்பிலான இரு வாரங்கள் கொண்ட பயிற்சிநெறி மலேசியாவின் பாங்கி நகரத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிநெறியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம், அல்-ஹாபிழ் எம்.ஏ. கஸ்ஸாலி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மலேசியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நிர்வாக முறைமைக்குள் இயங்கும் அமைப்புகள் குறித்தும் அவற்றின் கட்டமைப்புகள், இயங்குதல்கள், நடவடிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் எவ்வாறு நேர்த்தியான திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் தெளிவாக அறிந்து கொள்வதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இப்பயிற்சிநெறியில் தீவிரவாதத்துக்கு எதிரான இஸ்லாத்தின் போதனைகள், ஹலால் முறைமை, இஸ்லாமிய நிதி முறைமை, ஃபத்வா மையம், ஸகாத் வசூலிப்பு மற்றும் விநியோகம், இஸ்லாமிய வானியல் விஞ்ஞானம் ஆகிய பல்வேறு விடயங்கள் குறித்தும் தெளிவுகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவை, கொழும்பு, கண்டி மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களின் பள்ளிவாசல் சம்மேளன பதவி தாங்குனர்கள், தேசிய சூரா கவுன்சில் மற்றும் காதி நீதி மன்ற பிரதிநிதிகள் என பலரும் இப்பயிற்சி நெறிகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


– ACJU Media –






