லாகூர்-மின்ஹாஜ் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஹுஸைன் மொஹியுத்தீன் காதிரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு விஜயம்

2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி, பாகிஸ்தானின் லாகூர்-மின்ஹாஜ் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஹுஸைன் மொஹியுத்தீன் காதிரி அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.

வருகை தந்திருந்த பேராசிரியர் அவர்களுக்கு ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் அதன் செயற்பாடுகள், முன்னெடுப்புகள் பற்றி தெளிவுகளை வழங்கினார்.

இதில், உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் சமூக ஒற்றுமையின் அவசியம் குறித்தும் அதற்கான ஜம்இய்யாவின் முன்னெடுப்புக்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார். அத்தோடு அஹ்லுஸ் ஸுன்னாவிற்குட்பட்ட எல்லா சிந்தனை முகாம்களிலிருந்தும் ஆலிம்களை உள்வாங்கி கொள்கை வேறுபாடுகளை கடந்து ஜம்இய்யா செயற்பட்டு வருவதையும் தலைவர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, பேராசிரியர் ஹுஸைன் மொஹியுத்தீன் காதிரி அவர்களுக்கு ஜம்இய்யாவின் வெளியீடுகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன் சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

மேலும் அவரோடு வருகை தந்திருந்த பேராசிரியர் கலாநிதி சாந்திகுமார் ஹெட்டியாராச்சி அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில், ஜம்இய்யா சார்பில் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர், உப தலைவர்களான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். கலீல் மற்றும் அஷ்-ஷைக் எச். உமர்தீன், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன