தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு விஜயம்

2024.08.21ஆம் திகதி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு வருகைதந்து சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய குறித்த சந்திப்பிற்கான நேரம் வழங்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர்கள், உப செயலாளர்கள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோருடன் சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருத்தனர்.

வருகை தந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் பிரமுகர்களுக்கு ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகமும் அதனால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற, எல்லா காலங்களிலும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழவோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன் வாக்களிப்பு என்பது ஓர் அமானிதமாகும்; இவ்விடயத்தில் வாக்களிப்பவரும் வாக்களிக்கப்படுபவரும் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுனும் செயற்பட கடமைப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் நினைவுபடுத்தப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் உரையாற்றுகையில் அக்கட்சியின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், தனது கட்சி பற்றி விளங்கிக்கொள்ள விருப்பமுடையோர் அதன் கடந்தகால செயற்பாடுகளை வைத்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

 

 

– ACJU MEDIA –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன