பலஸ்தீன் காஸா பகுதியில் போர் நிறுத்த முன்மொழிவுக்கு சார்பாக எமது தாய் நாடாகிய இலங்கை வாக்களித்துள்ளமையை ஜம்இய்யா வரவேற்கின்றது

ACJU/NGS/2023/262
2023.10.30 (1445.04.14)

2023.10.26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 10 ஆவது அவசர கால சிறப்பு அமர்வு நடைபெற்ற போது, ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.

அதில், காஸா மீது நடாத்தப்படும் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டுமெனவும், காஸா மக்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல் என்ற விவாதத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்திருப்பதுடன், 45 நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறித்த தீர்மானத்திற்கு சார்பாக எமது நாடாகிய இலங்கை அரசும் வாக்களித்துள்ளமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கைவாழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன், தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான இச்சூழ்நிலையில் மனிதநேயம், நீதி மற்றும் நேர்மையை அடிப்படையாக வைத்து இவ்வாறான நிலைப்பாடொன்றை எடுத்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

எல்லாம் வல்ல இறைவனிடம் உலகெங்கிலும் நீதி, நேர்மை மற்றும் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

 

அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன