அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் (SLMMF) பதவிதாங்குநர்களுக்குமிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

2025 டிசம்பர் 18ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடகக் குழுவினருக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி தாங்குநர்களுக்கும் (SLMMF) இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றிடையிலான நல்லுறவினை வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

ஆரம்பமாக, ஜம்இய்யாவின் உப தலைவரும் ஊடகக் குழுவின் தலைமைப் பொறுப்பாளருமான அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களை வரவேற்றதுடன் ஜம்இய்யா சார்பில் கலந்து கொண்டவர்களை அறிமுகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, நூற்றாண்டு கடந்து பயணிக்கும் ஜம்இய்யா பற்றிய அறிமுகத்தினை வழங்கியதுடன் ஜம்இய்யா மற்றும் முஸ்லிம் மீடியா போரம் ஆகியன கடந்த காலங்களில் ஒருங்கிணைந்து செயற்பட்ட சந்தர்ப்பங்களை மகிழ்வுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், ஜம்இய்யா எப்போதும் ஆளுமைகளை, துறை சார்ந்தவர்களை மதித்து நடப்பதுடன் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களது ஆலோசனைகளை உள்வாங்கி செயற்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினார்.

அத்தோடு தலைவர் அவர்கள், ஜம்இய்யாவின் தெரிவுமுறை குறித்து தெளிவுபடுத்தியதுடன் உண்மைகளை வெளிக்கொணர்வதிலும் அவற்றை மக்களுக்கு புரியவைப்பதிலும் ஊடகவியலார்களின் பங்கு எத்தகையது என்பதனையும் குறிப்பிட்டுக் காட்டினார்.

அதனையடுத்து, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பி.எம். பைரூஸ் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகத்துறையில் ஆலிம்களின் பற்றாக்குறையை சுட்டிக் காட்டியதுடன் அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளை இருதரப்பும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், ஆலிம்கள் ஊடகவியலார்களுக்கு மார்க்க வழிகாட்டல்களை வழங்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்ட மீடியா போரத்தின் தலைவர், எதிர்காலங்களில் அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

குறித்த சந்திப்பின் போது, முதற்கட்டமாக கொழும்பு மாவட்ட ஆலிம்களுக்கு ஊடகப் பயிற்சி செயலமர்வினை நடாத்தல், மாதாந்தம் இருதரப்பு சந்திப்புகளை நடாத்தல் போன்ற சில தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், குறித்த சந்திப்பு மிகப் பயனுள்ளதாக அமைந்ததாகவும் சமூகத்திற்கான பணிகளில் முரண்பாடுகளின்றி எப்போதும் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதன்போது, அண்மைய அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் தலைவர் அல்-ஹாஜ் ரிஸ்வி அவர்களினால் குறிப்பிட்டளவு நிதி முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

சந்திப்பின் இறுதியில், வருகை தந்த ஊடகவியலாளர்களுக்கு ஜம்இய்யாவின் 2022 – 2025 இற்கான செயற்பாட்டறிக்கையின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், ஜம்இய்யா சார்பில் தலைவர், உப தலைவர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்து கொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன