ACJU/NGS/2023/252
2023.10.17 (1445.04.01)
சராசரி மனித வாழ்வுக்கு அடிப்படைகளாக விளங்கும் உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் ஏற்படும் பற்றாக்குறையே வறுமையென கருதப்படுகிறது.
வறுமையினால் பீடிக்கப்படுகின்ற பொழுது தனிநபர் என்ற அடிப்படையிலும் சமூக ரீதியாகவும் மனிதர்களது சிந்தனைகள், செயற்பாடுகள், எண்ணங்கள், ஒழுக்க விழுமியங்கள், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வறுமையிலிருந்து மீள மனிதன் எதனையும் செய்ய துணிந்துவிடுகிறான். ஏமாற்றுதல், கொலை, கொள்ளை, விபசாரம் என அத்தனை மாபாதகங்களிலும் ஈடுபடுகிறான். இஸ்லாம் இவ்வாறான தீயவைகளை விட்டு தவிர்ந்து நடக்குமாறு எச்சரிப்பதோடு வறுமையிலிருந்து விடுபடுவதற்கான அழகிய வழிமுறைகளையும் கற்றுத்தந்திருக்கிறது.
அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
‘வறுமையைப் பயந்து உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்துவிடாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெளிப்படையான, இரகசியமான மானக்கேடான காரியங்களை (செய்ய) நீங்கள் நெருங்காதீர்கள்!’ (ஸூறா அல்-அன்ஆம் : 151)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ‘இறைவா! நிச்சயமாக நான் உன்னிடம் இறை நிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.’ என்பதாக அல்லாஹு தஆலாவிடம் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள். (நூற்கள் : அபூதாவூத் : 5090, நஸாஈ : 5465)
இஸ்லாம் வறுமையினை ஒழிக்க அற்புதமான சில திட்டங்களை வகுத்துத் தந்திருக்கிறது. அவற்றில் மிக முதன்மையானது ஸகாத் ஆகும்.
பொருளாதாரம் குறிப்பிட்ட ஒரு தனிநபரிடம் அல்லது ஒரு சாராரிடம் மாத்திரம் சுருங்கி அதன் மூலம் அவர்கள் மாத்திரம் பயனடையும் பொறிமுறையை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. மாறாக அது முழு சமூகத்திற்கும் சென்றடைய வேண்டும் என்பதையே விரும்புகிறது. ஆதலால், தொழுகைக்கு அடுத்ததாக ஸகாத் எனும் தர்மத்தை நிறைவேற்ற கட்டளையிடுகிறது.
‘தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! உங்களுக்காக எந்த நன்மையை அனுப்பி வைக்கிறீர்களோ அதை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.’ (ஸூறா அல்-பகரா : 110)
ஸகாத் மாத்திரமன்றி வக்ஃப், ஸதகா, ஸதகத்துல் ஜாரியா போன்ற எந்தப் பிரதிபலன்களும் எதிர்பார்ப்புக்களுமின்றி செய்யப்படும் தர்மங்கள் மூலமும் வறுமையினை நீக்க இஸ்லாம் வழிகாட்டியிருக்கிறது.
‘தன் அண்டை வீட்டான் பசியோசிடிருக்க தான் வயிறு நிறைய புசித்திருப்பவன் பூர்த்தியான முஃமினாகமாட்டான்’ என்கிறது இஸ்லாம். (நூற்கள்- ஹாகிம், தபரானி)
வறுமையிலிருந்து விடுபட இஸ்லாம் கூறும் மற்றொரு வழிமுறைதான் சுயதொழில் ஊக்குவிப்பு. அல்லாஹு தஆலா அல்-குர்ஆனிலே பல இடங்களில் தொழில் செய்யுமாறும் அவனது அருளைத் தேடி பயணிக்குமாறும் ஊக்கப்படுத்தியிருக்கிறான்.
‘(ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள். அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.’ (ஸூறா அல்-ஜுமுஆ : 10)
நபிமார்கள் தொழில்கள் செய்து உழைத்து வாழ்ந்திருக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தன்னுடைய வாழ்வில் ஒரு சிறந்த வணிகராக் கால்நடை வளர்ப்பாளராக திகழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுயதொழில்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள். (பார்க்க – நூல் : ஸஹீஹ் புஹாரி : 2072)
நபித்தோழர்களும் வியர்வை சிந்தி உழைத்து உண்ணக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
ஜுமுஆ நாளில் குளிப்பது பற்றி அம்ரா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வினவ, அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் : ‘அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜுமுஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது.’ (நூல் – ஸஹீஹ் புஹாரி : 903)
நபித்தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு மதீனா சென்றதும் அங்கிருந்த மக்களிடம் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக ‘எனக்கு கடைத்தெருவை காட்டித்தாருங்கள்!’ என்று கேட்டார்கள்.
இஸ்லாம் ஊக்குவித்திருக்கின்றவாறு மஸ்ஜித் நிர்வாகங்கள், சம்மேளனங்கள், அமைப்புக்கள் அந்தந்த பிரதேசங்களை, கிராமங்களை மையப்படுத்தி சுயதொழில் ஊக்குவிப்புக்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது காலத்திற்கு மிக ஏற்ற விடயமாகும்.
உலகளாவிய ரீதியில் வறுமை பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை வறுமையிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு கைகொடுப்பதற்காக அக்டோபர் 17 ஆம் திகதியினை சர்வதேச வறுமையொழிப்பு தினமாக ஐ.நா சபை பிரகடனம் செய்திருக்கிறது.
அல்லாஹு தஆலா எம் அனைவரையும் வறுமையிலிருந்து பாதுகாப்பானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரார்த்திப்பதோடு, வறுமையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து மீள அவன் அருள்பாலிக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறது.
அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாழில் ஹுமைதி
பதில் பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா