மல்வானை, அல்-முஸ்தபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்கும், க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் 2026 ஆகஸ்ட் 11அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாணவர்கள் பரீட்சையினை சிறந்த முறையில் எதிர்கொள்ளும் வகையில் அவர்களை உள ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, பரீட்சைக்கான முற்கூட்டிய தயார்படுத்தல்கள், அதிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் தமக்கேற்ற கல்வி மற்றும் தொழிற்துறைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள அவர்களுக்கு எவ்வாறு ஆதரவாகவும் உறுதுணையாக இருப்பது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், சகோதரர் ரம்ஸி க்ராத்தி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் தெளிவுகளை வழங்கினார்.
– ACJU Media –


