‘ஸகாத் தொடர்பிலான கடந்த கால மற்றும் சமகால பிரச்சினைகளுக்கான தெளிவுகள்’ எனும் தலைப்பில் நடைபெற்ற ஆலிம்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு

2026 ஜனவரி 24ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வா குழுவின் ஏற்பாட்டில், ‘ஸகாத் தொடர்பிலான கடந்த கால மற்றும் சமகால பிரச்சினைகளுக்கான தெளிவுகள்’ எனும் தலைப்பில், ஆலிம்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வொன்று வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

ஸகாத் கடமை தொடர்பில் சமூகத்தில் நிலவும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் தெளிவுகளை வழங்குவதற்காக ஆலிம்களை தயார்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.

இந்நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக மஜ்மஉல் ஹைராத் பள்ளிவாயலின் இமாம் அஷ்-ஷைக் ஸஹ்ரான் அவர்களால் அல்-குர்ஆன் பாராயணம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த ஆலிம்களை வரவேற்கும் முகமாக ஜம்இய்யாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வரவேற்புரையினை அடுத்து, ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொகுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக் காட்டியதுடன் இந்நாட்டில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள பெறுமதியான உரிமைகள் மற்றும் சட்டங்களை பேணிக் காப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு ஜம்இய்யாவினால் நடாத்தப்பட்ட ‘தஜ்தீத்’ மாநாட்டின் சாராம்சத்தை தலைவர் அவர்கள் சுருக்கமாக முன்வைத்ததுடன் ஸகாத் கடமையின் முக்கியத்துவம் மற்றும் மகிமைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

தலைவரது உரையினை அடுத்து, ஃபத்வாக் குழுவின் பதில் செயலாளர் அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் அவர்கள் ‘ஸகாத் கடமை பற்றிய முன்னுரை மற்றும் நிபந்தனைகள்’ எனும் தலைப்பில் விளக்கக் காட்சிகளுடனான தெளிவுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து, ஃபத்வாக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா, அஷ்-ஷைக் கே.எச்.எம்.ஏ. மபாஸ், அஷ்-ஷைக் எம்.என். அப்ராஸ் ஆகியோர் முறையே ‘ஸகாத் கடமையாகும் பொருட்கள்’, ‘ஸகாத் பெற தகுதியானவர்கள்’ மற்றும் ‘ஸகாத் வழங்குதல்-நிறைவேற்றுதல்’ ஆகிய தலைப்புகளில் விளக்கக் காட்சிகளை முன்வைத்து தெளிவுகளை வழங்கினர்.

இதனையடுத்து, ஸகாத் தொடர்பிலான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தெளிவுகளும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட ஆலிம்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதியாக, ஜம்இய்யாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் ஜம்இய்யாவின் அழைப்பினையேற்று நிகழ்விற்கு வருகை ஆலிம்களுக்கும், நிகழ்விற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய வெள்ளவத்தை ஜுமுஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருக்கும் ஜம்இய்யா சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்வினை, ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஃபத்வாக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மபாஹிம் அவர்கள் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

– ACJU Media –

Related Posts

1 thought on “‘ஸகாத் தொடர்பிலான கடந்த கால மற்றும் சமகால பிரச்சினைகளுக்கான தெளிவுகள்’ எனும் தலைப்பில் நடைபெற்ற ஆலிம்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு”

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன