ஹிஜ்ரி 1448 முஹர்ரம் புதிய இஸ்லாமிய ஆண்டிற்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துச் செய்தி!

ACJU/NGS/2026/78
2026.06.17 (1448.01.01)

அல்லாஹ்வின் பேரருளாலும் கருணையாலும், மேலும் ஒரு புதிய இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1448 இனை நாம் வரவேற்கும் இந்நேரத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) தனது குர்ஆனில் கூறுகிறான்:

“நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அச்சப்படுபவர்கள் தான் அறிவாளிகள்.” (ஸூரா பாதிர் – 35:28)

இந்த புதிய ஆண்டு நம்மை அல்லாஹ்வின் பயத்தில் நிலைத்தவர்களாகவும், நல்லொழுக்கத்தில் உயர்ந்தவர்களாகவும், சமூகப் பொறுப்புணர்வில் முன்னேறியவர்களாகவும் மாற்றும் ஒரு தொடக்கமாக அமைய வேண்டுகிறோம்.

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும். இது ‘அல்லாஹ்வின் மாதம்’ எனவும் அழைக்கப்படுகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“ரமழானுக்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால், இந்த மாதம் நமக்கு ஆன்மீக வளர்ச்சிக்கும் சுய பரிசீலனைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். நமது கடந்த ஆண்டின் செயல்களை சிந்தித்து, பிழைகளைத் திருத்தி, புதிய ஆண்டில் நேர்பாதையில் முன்னேற உறுதி எடுக்க வேண்டிய காலமாகும்.

இன்றைய உலக நிலவரத்தை நாம் ஆராயும் போது, பல்வேறு சவால்களும் சோதனைகளும் மனிதகுலத்தைச் சூழ்ந்துள்ளன. மத்திய கிழக்கு உட்பட உலகின் பல பகுதிகளில் நடைபெறும் யுத்தங்களால் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்; தாய்மார்கள் துயருறுகின்றனர்; குழந்தைகள் அநாதைகளாகின்றனர். இந்நிலையிலே நாம் அல்லாஹ்விடம் வேண்டுவது: அல்லாஹ்வே! உலகின் அனைத்து இடங்களிலும் அமைதியை ஏற்படுத்தி, அநீதியிலிருந்து மனிதகுலத்தை பாதுகாத்தருள்வாயாக! ஆமீன்!

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:

“முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமின் சகோதரன். அவனைத் துன்புறுத்த மாட்டான்; அவனை விட்டுவிட மாட்டான்.” (ஸஹீஹ் புகாரி)

இதன்படி, நாம் உலக முஸ்லிம் சகோதரர்களின் துயரங்களை உணர்ந்து, அவர்களுக்காக துஆ செய்வதோடு மட்டுமல்லாமல், இயன்ற அளவில் உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமையுடையவர்களாக இருக்கிறோம்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை கடந்த காலத்தை விட சீரமைப்பின் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். இந்த முன்னேற்றம் நிரந்தரமாக நிலைக்க, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் கடமையுணர்வுடன் செயல்படுவது அவசியமாகும். ஊழலைத் தவிர்த்து, நியாயமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சமூக நலனை முன்னிறுத்துதல் ஆகியவை இந்த நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளங்களாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் நியாயத்திலும் பக்தியிலும் ஒன்றிணைந்து செயற்படுங்கள்.” (ஸூரா மாயிதா – 05 : 02)

எனவே, மதம், இனம், மொழி என்பவற்றைக் கடந்து மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை வளர்ப்பதே இன்றைய அவசியமாகும்.

ஹிஜ்ரத் என்ற பெரும் தியாகத்தை முஹர்ரம் மாதம் நமக்கு நினைவூட்டுகிறது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செய்த தியாகம், நமக்கு ஒரு நிரந்தர பாடமாகும். அந்த தியாக உணர்வை நாம் இன்று சமூக சேவையிலும், நியாயத்திலும், நேர்மையிலும் வெளிப்படுத்த வேண்டும்.

புதிய இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1448 ஆனது,

  • நம் சமுதாயத்திற்கு அமைதியையும் முன்னேற்றத்தையும் வழங்கட்டும்.
  • உலக முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்.
  • இலங்கைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையையும் வளத்தையும் உருவாக்கட்டும்.
  • மனிதகுலம் முழுவதற்கும் சமாதானம், நீதி, சகோதரத்துவம் ஆகியவற்றை கொடுக்கட்டும்.

முஸ்லிம்களாகிய நாம், எமது இஸ்லாமிய புத்தாண்டை இந்த வழிகாட்டல்களுக்கேற்ப வரவேற்பதோடு நாட்டிலுள்ள பாடசாலைகளிலும் இன்றைய தினத்தில் ஆலிம்களைக் கொண்டு முஹர்ரம் மாதத்தை நினைவுகூர்ந்து மார்க்க உபதேசங்களை நடாத்துமாறும் வேண்டுகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் நல்ல செயல்களை ஏற்றுக்கொண்டு, இந்த புதிய ஆண்டில் நமக்கு நன்மைகள் நிறைந்த வாழ்வையும் இறையருளையும் வழங்குவானாக. ஆமீன்!

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன