தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தவிசாளர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் 2026 ஆகஸ்ட் 10 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு விஜயம் செய்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உள ரீதியான துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் புதிதாக தயாரிக்கப்பட்ட தண்டனைச் சட்ட முன்மொழிவு குறித்த அறிமுகத்தை வழங்கும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, வருகை தந்திருந்த பிரதிநிதிகள், நாடளாவிய ரீதியில் பதிவாகும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் தரவாதாரங்களுடன் சுட்டிக் காட்டியதுடன், அவற்றை கட்டுப்படுத்த சகல தரப்பினரும் புரிந்துடணர்வுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், இவ்விடயத்தின் அவசியம் குறித்து பேசியதுடன், இஸ்லாத்தில் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சிறப்புகள் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும் அல்-குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்.
அத்தோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு பற்றிய அறிமுகத்தை வழங்கிய அவர், மகளிர் மற்றும் சிறுவர்கள் தொடர்பான மேலதிக இஸ்லாமிய தெளிவுகளைப் பெற்றுக்கொள்ள ஜம்இய்யாவை அணுக முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், சிறுவர் அதிகார சபை சார்பில் அதன் தவிசாளர் ப்ரீதி இநோகா ரணசிங்க, சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சட்டத்தரணி பிரீத்திகா சகலசூரிய மற்றும் சைபர் பிரிவு உத்தியோகத்தர் மிப்ராஜ் அஹமத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில் தலைவர், பொருளாளர், உப தலைவர், உப பொதுச் செயலாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி, பொது முகாமையாளர் ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.




– ACJU Media –


