ACJU/NGS/2023/119
2022.03.27 (1444.09.04)
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும் ஸதகாவினதும் மாதமாகும்.
ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக வழிகாட்டல்கள்:
1. ரமழான் மாதத்தின் அனைத்து நோன்புகளையும் பேணுதலுடன் நோற்றல். ‘ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
2. பர்ழான, சுன்னத்தான இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்தல். குறிப்பாக சமூக வலைத்தளங்களிலும் வேறு அனாவசியமான விடயங்களிலும் நேரத்தை வீணடிப்பதை முற்றாக தவிர்ந்துகொள்ளல்.
3. தராவீஹ் தொழுகை மற்றும் இரவுநேர வணக்கங்களில் அதிகமானளவு ஈடுபடுதல். ‘ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இரவு வணக்கத்தில் ஈடுபடுகின்றவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
4. அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமழான் மாதத்தில் அல்குர்ஆனுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தல். மேலும் அதனை அதிகம் ஓதுவதுடன் அதன் விளக்கவுரைகளை வாசிப்பதும் அதன் போதனைகளை எமது வாழ்வில் எடுத்து நடப்பதும் பிறருக்கு அதன்படி வாழ வழிகாட்டுவதும் அல்குர்ஆன் மீதான எமது கடமைகள் ஆகும். ஓவ்வொரு தனி நபரும் அதிகமதிகம் அல்குர்ஆனை ஓதி வருவதுடன் குறைந்தபட்சம் நாளாந்தம் ஒரு ‘ஜுஸ்உ’ வையாவது ஓத முயற்சி செய்தல்.
5. சுயவிசாரணை (முஹாஸபா) செய்வதற்குரிய சந்தர்ப்பமாக ரமழானை ஆக்கிக் கொள்ளுதல்.
6. ரமழானின் இறுதி 10 தினங்களில் இஃதிகாப் எனும் அமல் முக்கியத்துவம் பெறுவதால் இந்த அமலை ஊர் மக்கள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகள் உரிய முறைகளைப் பேணி செய்து கொடுத்தல்.
7. துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற மகத்தான இம்மாதத்தில் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரம், ஸஹர் நேரம், அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரங்களை அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளல்.
இவ்வழிகாட்டல்களைப் பின்பற்றி இப்புனித ரமழானை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வோமாக! எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவருக்கும் ரமழான் மாதத்தை அடைந்து அவனது ரஹ்மத்தையும் மங்பிரத்தையும் நரக விடுதலையையும் பெற்ற கூட்டத்தில் எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக.
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான்
செயலாளர் – பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




