அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் விவகாரப் பிரிவின் வழிகாட்டலில், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஜம்இய்யா கிளைகளை வலுப்படுத்தும் நோக்கில் கிளைகள் வலுவூட்டல் நிகழ்ச்சி 2026 ஒக்டோபர் 04 அன்று கிரிந்தை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஹம்பாந்தோட்டை நகரக் கிளை, தங்கல்ல பிரதேசக் கிளை மற்றும் கிரிந்தை பிரதேசக் கிளை ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தலைமையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், கிளைகள் விவகார உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். பவாஸ், கிளைகள் விவகார ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எம். அப்துல் காதிர் மற்றும் உதவி ஒருங்கிணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எப்.எம். உமர், பொது முகாமையாளர் சகோதரர் ஜவாஹிர் ஸாலி மற்றும் கணக்காளர் சகோதரர் எம்.எப்.எம். இர்ஃபத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ‘ஆலிம்களின் பொறுப்புகளும் கடமைகளும் – கிளைகளின் பொறுப்புகளும் கடமைகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். தனது உரையில், சமூகத்திற்கும் மார்க்கத்திற்கும் ஆலிம்கள் ஆற்ற வேண்டிய பணிகள், ஜம்இய்யாவின் நோக்கங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கிளைகளின் பொறுப்புகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து கிளைகள் விவகார இணைப்பாளர் அஷ்-ஷைக் எம்.எப்.எம். உமர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன், கிளைப் பொறுப்புதாரர்களுக்கான பயிற்சி அமர்வையும் நடாத்தினார். ஜம்இய்யாவின் யாப்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு காட்சிப்படுத்தல் (Presentation) ஊடாக நிர்வாக நடைமுறைகள், கிளை நிர்வாகம் மற்றும் பொறுப்புதாரர்களின் கடமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
பின்னர் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரி.எம். ளரீஃப் அவர்கள், கிளைகளில் உப குழுக்களை அமைப்பதன் அவசியம், அவற்றின் செயற்பாட்டு முக்கியத்துவம் மற்றும் உப குழுக்களின் பொறுப்புகள், கடமைகள் என்பன குறித்து விளக்கமளித்தார். குறிப்பாக கல்வி, ஊடகம், சமூக சேவை, மகளிர் விவகாரங்கள், ஹிலால் மற்றும் ஏனைய உப குழுக்களை செயற்படுத்துவதன் மூலம் கிளைகளின் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து கணக்காளர் சகோதரர் எம்.எப்.எம். இர்ஃபத் அவர்கள் கிளைகளின் நிதி முகாமைத்துவம், வங்கிக் கணக்குகள் திறப்பதற்கான நடைமுறைகள், வரவு-செலவுப் பதிவுகளின் ஒழுங்குமுறை மற்றும் நிதி வெளிப்படைத்தன்மை தொடர்பாக விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் மாவட்ட மற்றும் சில பிரதேசக் கிளைகளில் பதவிதாரர்களில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அவற்றிற்கான தீர்வுகள் உறுப்பினர்களின் ஏகமனதான இணக்கப்பாட்டின் அடிப்படையில் சுமுகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கிளைகளின் எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்துதல், இரண்டு ஆண்டுகளுக்கான நிகழ்ச்சி திட்டமிடல் அமைக்கப்பட்டதுடன் உப குழுக்களைச் செயற்படுத்துதல், உறுப்பினர் ஒருங்கிணைப்பு மற்றும் தலைமையகத்துடனான தொடர்பாடல்களை மேம்படுத்துதல் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
ஹம்பாந்தோட்டை மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதொரு வழிகாட்டல் அமர்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.






– ACJU Media –


