ACJU/NGS/2026/128
2026.11.04 (1448.05.23)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டக் கிளை மற்றும் புத்தளம் நகரக் கிளை ஆகியவற்றின் செயலாளராக மிக நீண்டகாலம் செயற்பட்டுவந்த அஷ்-ஷைக் ஹனஸ் முஹிதீன் (நளீமி, ரியாதி) (اللهم اغفرله وارحمه) அவர்களது மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார், புத்தளம் மாவட்ட ஜம்இய்யாவின் கௌரவ தலைவராக இருந்த முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மர்ஹூம் அஷ்-ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் புத்தளம் மாவட்டத்தில் சமய, கல்வி, கலாசார, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக பாரிய பங்களிப்பினை வழங்கியவராவார்.
தனது ஷரீஆ கல்வியை ஜாமிஆ நளீமிய்யாவில் கற்றுத் தேர்ந்த பின்னர், சஊதி அரேபியாவின் ரியாத் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று, நாடு திரும்பிய அன்னார், கனமூலை மற்றும் புத்தளம், மணல்குன்று அரச பாடசாலைகளில் ஆசிரியராக கடமை புரிந்ததுடன் அப்பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பாரியதொரு பங்காற்றியவராகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
புத்தளம் அல்-மத்ரஸதுல் இஸ்லாமிய்யா மத்ரஸாவின் முன்னாள் கௌரவ செயலாளராகவும், 1990ஆம் ஆண்டிலிருந்து புத்தளம் அல்-மத்ரஸதுல் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் நீண்ட கால வருகைதரு விரிவுரையாளராகவும், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் பின்னர் அக்கல்லூரியின் கல்வி நிர்வாகப் பொறுப்பாளராகவும் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். இந்நேரத்தில் அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹு தஆலா அவருடைய பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக!
அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
“யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!”
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


