2025.07.24 (1447.01.28)
முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைக்கப்பெற்ற அல்லாஹ்வின் அருளாகும். அதனை இயன்ற வரையில் அன்று முதல் எமது மூதாதையர்கள் பாதுகாத்து வந்தனர்.
இதில் 99 பிரதான பகுதிகள் உள்ளன. அவை 12 உப பிரிவகளாக அமையப் பெற்றுள்ளன. அவற்றில் 09 பகுதிகளே ஷரீஆத்துடன் தொடர்புபட்டவை. ஏனைய 90 பகுதிகளும் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்டவை. ஒருவர் தான் சார்ந்திருக்கும் மத்ஹபை அடிப்படையாகக் கொண்டு விவாக மற்றும் விவாகரத்து விடயங்களை செய்து கொள்வதற்கு உரிமையுடையவராவார் என்பது இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1806 இல் ‘முஹம்மதியன் கோட்’ என்றும் 1929 இல் முஸ்லிம் திருமணப் பதிவுச் சட்டம் என்றும் அழைக்கப்பட்டதுடன் 1951 ஆம் ஆண்டு முதல் இது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் என மாற்றப்பட்டது. திருமணம், திருமணப் பதிவு, விவாகரத்து, விவாகரத்துப் பதிவு மற்றும் திருமணத்தின் ஊடாக ஏற்படும் பராமரிப்பு என்பன இவற்றில் பிரதானமானவையாகக் கணிக்கப்படுகின்றன.
விவாகரத்து என்பது ஒரு பிரதான இடத்தை வகிப்பதனால் அது காதிகள், காதிகள் சபை, நீதிமன்றம் என்ற ஒழுங்கில் அதன் செயற்பாடு அமைந்துள்ளது. அதாவது முதலில் ஒரு காதி நீதவான் குறித்த விசாரணை மேற்கொண்டு ஒரு முடிவை எட்டுவார். அதில் இரு தரப்பினர் அல்லது ஒரு தரப்பினர் அதிருப்தி கொள்ளும் போது காதிகள் சபையில் மேல் முறையீடு செய்யப்படும். அதிலும் அதிருப்தி ஏற்படுமாயின் மேல் முறையீட்டு நீதிமன்றம் வரை அந்த விசாரணையை எடுத்துச் செல்ல முடியும்.
இந்நாட்டில் வாழும் அதிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஷாஃபிஈ மத்ஹபை அடியொட்டிப் பின்பற்றுவதால் அம்மத்ஹபை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சட்டத்தைக் கொண்டு அன்று முதல் தீர்மானங்கள் பெறப்படுகின்றன என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இவ்வாறு ஷரீஆவுடன் தொடர்புற்ற விவாக, விவாகரத்து என்பன மார்க்கத்துடன் நேரடியாகத் தொடர்புபடுவதால் அவற்றை ஷரீஆவின் அடிப்படையில் தான் தீர்க்க வேண்டும் என்பது மிகத் தெளிவானதாகும் என்பதை எந்த ஒரு முஸ்லிமும் மறுக்கமாட்டார்.
மற்றுமொரு பகுதி இருக்கிறது. அது முழுக்க முழுக்க நிர்வாக முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட, ஷரீஆவுடன் எத்தகைய தொடர்புமற்ற எனினும் அத்தியாவசியமான ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
காதி நீதிபதிகள் நியமனம் அவற்றில் ஒன்று. அவர்களை நீதி அமைச்சின் கீழ் இயங்கும் நீதிச் சேவை ஆணைக் குழுவே நியமிக்கும் அதிகாரம் கொண்டுள்ளது. அந்நியமனத்துக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் எத்தகைய தொடர்போ அல்லது அதிகாரமோ கிடையாது. எனினும் சிலர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே அவர்களை நியமிப்பதாக நினைக்கின்றனர். எனவே தான், எங்காவது ஒரு காதி தவறு செய்யுமிடத்து உடனடியாக ஜம்இய்யாவுக்கு எதிராக எழுதவும் விமர்சிக்கவும் எத்தனிக்கின்றனர். ஜம்இய்யா அவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை தொடர்ச்சியாக வழங்கிக்கொண்டு வருகின்றது.
கடந்த 30 வருடங்களாக காதி நீதிமன்றிலும் காதிமார்களின் முகாமைத்துவத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதற்கான பல முயற்சிகள் பலராலும் மேற்கொள்ளப்பட்டன. இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் பலரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. அதில் சிலர் காதி நீதிபதி என்ற நியமனம், அவரது அதிகாரம், சம்பளம், காதி நீதிமன்றம், முகாமைத்துவ அல்லது நிர்வாகப் பயிற்சிகள் போன்றவை பற்றிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது காதி நீதிமன்றங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
உண்மையில் காதி நீதிமன்றங்களில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் போன்றவற்றிற்கு அவற்றில் காணப்படும் வசதிக் குறைபாடுகள், பயிற்சியின்மை, தேர்வின் போது ஏற்படும் பிரச்சினைகள், தகுதியானவர்கள் முன் வராமை, சமூகம் அவர்களுக்கு ஒத்துழையாமை போன்ற பல காரணங்கள் காணப்படுகின்றன.
தேசத்தில் 63 காதிகள் தற்போது உள்ளனர். அவர்களுக்கு பெரியளவிலான சம்பளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக 13,500 மட்டுமே ஒரு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. இதுவும் அவர்களின் செலவுகளுக்கான ஒரு ஒதுக்கீடாகும். அவர்களுக்கு பிராந்திய பொலிஸும் கிராம சேவகரும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமேயாகும். அது தவிர வேறு எந்த உதவிகளும் அவர்களுக்கு இல்லை.
அவர்களை நெறிப்படுத்தி வளப்படுத்தும் பொறுப்பு பதிவாளரின் கீழ் அமைய வேண்டும் என்பது எழுத்தில் மட்டும் உள்ளது. அவ்வாறான எந்த முயற்சிகளும் இடம்பெறுவதில்லை. அத்துடன் காதிகள் சபையிலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவைகள் அனைத்தும் நிர்வாக ரீதியானவை. ஷரீஆ சட்டத்துடன் தொடர்பற்றவை.
இவ்வாறான முகாமைத்துவ ரீதியிலான முன்னேற்றங்கள், மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்றும் கரிசனை செலுத்தியே வந்துள்ளது. அதனை ஒரு போதும் எதிர்க்கவில்லை. அவற்றிற்குத் தடையாக நின்றதுமில்லை. இது ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும். அரசும் இதற்காக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று கருத்துச் சொல்பவர்கள், ஜம்இய்யாவைக் குறை கூறுபவர்களின் அதிகாரத்தின் கீழ் இதற்கான போதிய சந்தர்ப்பம் இருந்தது. அதனை மறந்து ஜம்இய்யாவை மட்டும் குற்றஞ்சாட்டுகின்றனர். இது அறிவுடமையாகாது.
அதே நேரம் ஆணும் பெண்ணும் சரி சமம்; ஆண்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்ற மேற்கத்திய சமத்துவக் கோட்பாடு மற்றும் அதன் சிந்தனையை அடியொட்டியதாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அச்சிந்தனையில் மூழ்கிப் போன சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரையில் ஷரீஆவோ அல்லது ஷாஃபிஈ மத்ஹபோ அல்ல. அவர்களது மேற்கத்திய சிந்தனை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் இலக்கு.
இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கண்டிப்பாக வலீ – பொறுப்பாளர் இருக்க வேண்டும். இதனை மாலிக்கி, ஷாஃபிஈ மற்றும் ஹன்பலீ மத்ஹப்கள் வலியுறுத்துகின்றன.
ஹனஃபி மத்ஹபின் நிலைப்பாடு யாதெனில், சுதந்திரமான, சுயபுத்தி உள்ள, வயதுவந்த பெண்ணொருத்தி அவளது பாதுகாவலரின் (வலி) ஒப்புதல் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணம் செல்லுபடியானாலும் கண்டிக்கத்தக்கதாகும் என்பதாகும். அவள் திருமணம் செய்துகொள்ளும் நபர் பொருத்தமான இணையராக (குஃப்) இல்லாத பட்சத்தில், வலியின் ஒப்புதல் பெறப்படாவிட்டால் அந்தத் திருமணம் வலிதற்றதாகக் கருதப்பட்டு காதியால் ரத்து செய்யப்படலாம்.
இதனை மேம்படுத்துவதற்காகவும், பெண்கள் அநீதியிழைக்கப்படாமலிருப்பதற்காகவும் வலீயுடன் மணமகளின் சம்மதமும் பெறப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வலீயாக இருப்பவருக்கோ அல்லது மணமகளுக்கோ தன்னிச்சையாக செயற்பட முடியாது.
பெண்ணின் திருமண வயதுக்கு ஓர் ஆரம்ப எல்லை இருக்க வேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அந்த விடயம் காலத்துக்குக் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். எமது தனியார் சட்டத்தில் ஒரு பெண்ணின் திருமண வயதின் துவக்கம் 12 வயதாகவும் அதற்குக் கீழ் தேவைப்படின் காதியின் அனுமதி பெறப்படல் வேண்டும் என்றும் உள்ளது. இச்சட்டம் தற்பொழுதும் உலகின் பல பகுதிகளிலும் குறிப்பாக பல மேற்கத்திய நாடுகளிலும் நடைமுறையில் காணப்படுகின்றது. எனினும், இவ்வயதில் திருமணம் செய்துகொள்வது தேசத்தில் மிகவும் அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது. 16 வயது என்பது ஓர் ஆணின் அல்லது ஒரு பெண்ணின் பாலியல் உறவுக்கான வயதாக பொதுச் சட்டத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 16 வயதில் திருமணம் முடிக்கத் தடுக்கப்படும் அதே வேளையில் பாலியல் தொடர்புகளுக்கு அனுமதிக்கப்படுகின்றமை ஒரு நகைப்பாகும்.
பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்பது மற்றும் சிலரின் கோரிக்கையாகும். இதனை ஆணாதிக்கம் என்று அடையாளப்படுத்தி பெண்களிடம் நன்மதிப்பை பெறலாம் என்று எண்ணுகின்றனர். வலீ என்பவர் ஆணாக இருக்க வேண்டும் என்பதைப் போன்றே காதியும் ஓர் ஆணாக இருக்க வேண்டும் என்பது சட்ட அறிஞர்களின் நிலைப்பாடாகும். அதுவும் அல்-குர்ஆன், ஸுன்னாவின் ஒளியிலானதாகும். எனினும் ஒரு காதியுடன் இரண்டு பெண்கள் ஜூரிகளாக நியமிக்கப்படலாம் என்ற பரிந்துரையை ஜம்இய்யா முன்வைத்துள்ளது.
பலதார மணத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்பது சிலரின் வாதமாகும். எனினும் அல்-குர்ஆனில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ள இவ்விடயத்தை இல்லாதொழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது ஜம்இய்யாவின் நிலைப்பாடு.
தற்போதுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் உள்வாங்கப்படாத பல விடயங்களை ஜம்இய்யா பரிந்துரை செய்துள்ளது. உதாரணமாக குல்உ (பெண் தரப்பால் விவாகரத்துக் கோரல்) மதாஉ (தாபரிப்பு) திருமணப் பதிவில் மனப்பெண்ணின் கையொப்பம் போன்ற பெண்கள் எதிர்நோக்கும் விடயங்களைக் குறிப்பிடலாம்.
மேற்குறித்த விடயங்களில் ஜம்இய்யாவின் பரிந்துரையை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
இவையல்லாத அதாவது ஷரீஆவின் சட்டங்களுடன் நேரடியாக முரண்படும் விடயங்களில் திருத்தங்கள் செய்ய இயலாது. எனினும் அவற்றிற்கு மாற்றீடாக பல விடயங்களை பரிந்துரை செய்துள்ளது. ஷரீஆவுக்கு உட்பட்ட எந்த திருத்தங்களையும் ஆலோசனைகளையும் ஜம்இய்யா வரவேற்கும் ஒத்துழைக்கும். அதற்கு தடையாகவோ இடையூறாகவோ இருந்ததுமில்லை. இதற்குப் பின்னர் இருக்கப்போவதுமில்லை என்பதே நிதர்சனமாகும்.
ஜம்இய்யத்துல் உலமா தடையாக இருப்பதாக விரல்விட்டு எண்ணப்படக்கூடிய குறிப்பிட்ட சில தனி நபர்களால் குற்றம் சாட்டப்படுவது எவ்விடயத்தில் என்பது இப்போது தெளிவாகி இருக்கும். அதாவது முகாமைத்துவ முன்னெற்றம் பற்றிப் பேசவும் முயற்சிக்கவும் இயலுமானவர்கள் அவ்விடயத்தில் முயற்சிக்காமல், மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில் எமது தனியார் சட்டத்தை மாற்றியமைக்க முயற்சிக்கின்றனர். ஷரீஆவுடன் தொடர்புபட்ட விடயங்களை ஆலிம்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் மீதான பணிகளையும் கடமைகளையும் செய்ய முன்வர வேண்டும். இதுதொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களுடனான விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
வெறுமனே உலமாக்களை மட்டும் குற்றம் சாட்டுவதில் சமூகம் எத்தகைய நலவையும் அடையப் போவதில்லை. கிடைக்கப் பெற்றிருக்கும் வரப்பிரசாதத்தையாவது பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப்
செயலாளர் – ஆய்வு மற்றும் வெளியீட்டுக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை





1 thought on “காதி நீதிமன்ற முகாமைத்துவத்தில் ஷரீஆவுக்கு முரணில்லாத திருத்தங்களை வலியுறுத்துவதுடன் அத்திருத்தங்களுக்கு அனைவரும் ஒத்துழையுங்கள் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்”
மாஷா அல்லாஹ். மிகவும் அழகான முறையில் தெளிவாக பதில் அளித்து இருக்கிறீர்கள்.
Jazakukumullah KHyr.