அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று 2026 செப்டம்பர் 10 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்று அவற்றிற்கான உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இச்சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது பின்வரும் விடயங்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன:
1. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள்.
2. முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சுகள்.
3. தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகளை விடுவித்தல்.
4. அரபுக் கல்லூரிகளை பதிவு செய்தல் மற்றும்ஒ அல்-ஆலிம் பரீட்சைகளை மீண்டும் நடாத்துதல்.
5. அரச உயர் பதவிகளுக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பொருத்தமான முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள்.
6. முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத் திருத்தத்தை முறையாக செய்தல்.
7. கோவிட் 19 தொற்று காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கான நீதி மற்றும் அது தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றினை கோரல்.
8. அரச துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மத கலாசார வரையறைகளைப் பேணுவதில் காட்டப்படும் பாரபட்சங்களை இல்லாமலாக்குதல்.
அத்தோடு, இவ்விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சந்திப்பின் போது, கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவ்விடயங்கள் தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதுடன் உரிய தரப்புகளோடு கலந்துரையாடி விரைவில் சாதகமான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் அவர்களின் தலைமையில் , பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன் மற்றும் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட 16 பேர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.





– ACJU Media –


