அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில் பலாங்கொட கிளை ஜம்இய்யா மற்றும் பிரதேச மஸ்ஜிதுகளின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான இருநாள் பயிற்சிநெறி 2026 செப்டம்பர் 06, 07ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இதன்போது, ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனப்படும் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்து தெளிவுகள் வழங்கப்பட்டதுடன் கற்பித்தல் முறைமைகள், மாணவர்களோடு நடந்துகொள்ளும் ஒழுங்குமுறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகள் தொடர்பாகவும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பலாங்கொட கிளை ஜம்இய்யா மற்றும் பிரதேச மஸ்ஜித் நிர்வாகங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்தி, அவற்றை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள், திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அதிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.
இந்நிகழ்வுகளில், வளவாளர்களாக ஜம்இய்யாவின் அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் ஆளணியினர் கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் தொடர்பான தெளிவுகளையும் விளக்கங்களையும் வழங்கினர்.





– ACJU Media –


