அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் நெறிப்படுத்தலில், கம்பளை கிளை ஜம்இய்யா மற்றும் சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கல்வி நிலையம் (CREC) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ‘நாளைய நற்பிரஜை நமது பொறுப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட நிகழ்வு 2026 ஆகஸ்ட் 22 அன்று கம்பளை, ஆண்டியாகடவத்த மஸ்ஜிதுல் அப்ராரில் நடைபெற்றது.
கம்பளை வாழ் சிறார்களின் மார்க்கக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பில் அப்பிரதேசத்திலுள்ள முஅல்லிம்கள், முஅல்லிமாக்கள், கிளை நிர்வாகிகள், துறை சார்ந்த சார்ந்தவர்கள் மற்றும் மஹல்லாவாசிகளுக்கு விழிப்புணர்வூட்டி, சிறுவர்களுக்கான அல்-குர்ஆன் மத்ரஸாக்களை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக, கம்பளை பிரதேசத்திலுள்ள முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கான பயிற்சிநெறி நடைபெற்றது. இதன்போது, அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் ஹுமைதி அவர்கள், ஜம்இய்யாவின் ‘தஜ்தீத்’ எனப்படும் புதிய பயணத்திற்கமைய அல்-குர்ஆன் மத்ரஸா முறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்கள் மற்றும் புதிய நடைமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அல்-குர் மத்ரஸாக்களின் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
அதனையடுத்து, அஷ்-ஷைக் அஸ்வர் அலி அவர்கள், முஅல்லிம்கள் மற்றும் முஅல்லிமாக்கள் எவ்வாறு கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்த தெளிவுகளை வழங்கியதுடன் மாணவர்களோடு நடந்துகொள்ளும் ஒழுங்குமுறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகள் தொடர்பாகவும் வழிகாட்டல்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, கம்பளை கிளை ஜம்இய்யா மற்றும் சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கல்வி நிலையம் (CREC) ஆகியவற்றின் உறுப்பினர்களுடனான முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது, பிரதேசத்தில் அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்தி, அவற்றை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள், திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அதனையடுத்து, கம்பளை பிரதேசத்திலுள்ள மஸ்ஜித் நிர்வாகங்களின் பதவிதாங்குனர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் மஹல்லாவாசிகளுக்கான விசேட விழிப்பூட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப தலைவர் அஷ்-ஷைக் எச். உமர்தீன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், அல்-குர்ஆன் மத்ரஸாக்களின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலங்களில் ஜம்இய்யாவினால் நாடளாவிய ரீதியில் அல்-குர்ஆன் மத்ரஸா முறைமை வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்ததையும் நினைவுகூர்ந்தார்.
அத்தோடு, 2019 இன் பின்னர் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களினால் அல்-குர்ஆன் மத்ரஸாக்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பின்னடைவுகளையும் தலைவர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதுடன் அதனை மீண்டும் வெற்றிகரமாக செயற்படுத்த அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது, வருகை தந்திருந்த பிரமுகர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அல்-குர்ஆன் மத்ரஸாக்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், அதிலுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில், ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர், அல்-குர்ஆன் மத்ரஸா பிரிவின் செயலாளர் ஆகியோருடன் அல்-குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் ஆளணியினரும் வளவாளர்களாக கலந்துகொண்டு மேற்படி விடயங்கள் குறித்து தெளிவுகளை வழங்கினர்.





– ACJU Media –



