மஸ்ஜிதுல் அக்ஸா, பலஸ்தீன் மற்றும் காஸா மக்களுக்காக தொடர்ந்தும் குனூத்துன் நாஸிலாவில் பிராத்திப்போம்

ACJU/FTW/2023/48-528/ORG-01
2023.11.20 (1445.05.05)

குனூத்துன் நாஸிலா:

குனூத்துன் நாஸிலா என்பது முஸ்லிம்களுக்கு ஏற்படும் பொதுவான சோதனைகள் நீங்கும் வரைக்கும் பர்ளான தொழுகைகளில் ருகூவிற்குப் பின்னால் ஓதப்படும் குனூத்தாகும்.

துஆ பிரார்த்தனை:

துஆ என்பது ஒவ்வோர் அடியானும் அல்லாஹு தஆலாவிடம் நேரடியாகத் தமது கஷ்ட நஷ்டங்களை முறையிட்டு அதற்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆயுதமாகும். ஒரு மனிதர் இக்லாஸ், இறையச்சம், அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்ற உறுதி போன்ற பண்புகளை உள்ளடக்கிய நிலையில் மன்றாடி கேட்கும் பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

அதே துஆவை அவன் தொழுகையில் கேட்கும் பொழுது இன்னும் ஏற்றுக்கொள்ளப்படுவது உறுதியாகின்றது. மேலும், அதே துஆவைக் கூட்டாகத் தொழுதும்பொழுது அனைவரும் ஒன்றிணைந்து கேட்கும் பொழுது நிச்சயமாக அல்லாஹ் மிகவும் அவசரமாக ஏற்றுக் கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை.

உபாதா இப்னுஸ் ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது ‘பூமியில் எந்த முஸ்லிமும் அல்லாஹ்விடம் பாவமான காரியத்திற்காகவோ, உறவு முறையைத் துண்டிப்பதற்காகவோ, துஆக் கேட்காமல் இருக்கும் காலமெல்லாம் எந்த துஆவை அல்லாஹ்விடம் கேட்டாலும் அல்லாஹ் அதனை அவருக்குக் கொடுக்காமலோ அல்லது சிரமங்களிலிருந்து அந்த துஆவின் அளவுக்கு அவரை விட்டும் நீக்காமலோ இருப்பதில்லை’ என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது அக்கூட்டத்தினரில் ஒரு மனிதர், ‘அவ்வாறென்றால் நாங்கள் அதிகமாக துஆக் கேட்போம்!’ என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வும் மிக அதிகாகக் கொடுப்பவன்’ என்று கூறினார்கள். (நூல் : திர்மிதி)1

குனூத்துன் நாஸிலா ஓதப்படும் சந்தர்ப்பங்கள்:

அச்சம், பஞ்சம், வரட்சி மற்றும் திடீர் சோதனைகள் போன்றவை ஏற்படும் போது அவை நீங்குவதற்காக குனூத்துன் நாஸிலா ஓதப்படும்.

குனூத்துன் நாஸிலா ஓதும் இடம்:

பர்ளான தொழுகைகளில் ருகூவிற்குப் பின்னால் கூட்டாக அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனைகள் நீங்கும் வரை குனூத்துன் நாஸிலா ஓதுவது ஸுன்னத்தாகும். பர்ளான அனைத்துத் தொழுகைகளிலும் குனூத்துன் நாஸிலாவை ஓதுவது முஸ்தஹப் என ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் பஜ்ர் தொழுகையில் மாத்திரம் குனூத்துன் நாஸிலாவை ஓத முடியும் என ஹனபீ மற்றும் மாலிக்கி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ – رضي الله عنهما – قَالَ: ‘قَنَتَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم – شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنَ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ ‘ (أخرجه أحمد وأبو داود)2

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா மற்றும் சுபுஹ் ஆகிய தொழுகைகளில் கடைசி ரக்அத்தின் (ருகூவிலிருந்து எழுந்து) ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறிய பின் குனூத் ஓதினார்கள். அப்போது நபி அவர்கள், ‘பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ரிஃல், தக்வான் மற்றும் உஸய்யா என்ற துணைக் கோத்திரத்தார்கள் மீது சாபமிட்டார்கள். பின்னால் நின்று தொழுதவர்கள் ஆமீன் என்று கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)

குனூத்துன் நாஸிலாவில் ஓதப்படும் துஆக்கள்:

குனூத் அந்-நாஸிலாவில், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மிகவும் சுருக்கமாக துஆக்களை ஓதி ஸலவாத்துடன் முடித்துக்கொள்ளலாம். என்றாலும், ஷாபிஈ மத்ஹபில் பஜ்ர் தொழுகைக்குப் பின்னால் ‘அல்லாஹும்மஹ்தினா ஃபீமன் ஹதைத்…’ என்று வழமையாக ஓதப்படும் துஆவை ஓதிய பின், சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தேவையான ஒரு சில துஆக்களைத் தெரிவு செய்து ஓதுவதும் விரும்பத்தக்கதாகும்.

குனூத்துன் நாஸிலாவை சுருக்கமாக ஓதுதல்:

குனூத்துன் நாஸிலாவை மிக நீளமாக ஓதி மஃமூம்களைச் சலிப்படைய வைக்காமல் சுருக்கமாக ஓத வேண்டும். பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தாக நிறைவேற்றும் போது ஸுன்னாக்களையும் நிபந்தனைகளையும் பேணி சுருக்கமாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பது நபிவழியாகும்.

குனூத்துன் நாஸிலாவை எவ்வளவு காலம் ஓத வேண்டும்:

நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்-குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களை மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க ஒரு கோத்திரத்தாரிடத்தில் அனுப்பிய சந்தர்ப்பத்தில் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்து ஹாபிழ்களைக் கொலை செய்தமைக்காக அவர்களுக்கு எதிராக துஆ செய்தார்கள். சில அறிவிப்புகளில் முப்பது நாட்கள் தொடராக குனூத்துன் நாஸிலா ஓதியதாகவும் இன்னும் சில அறிவிப்புகளில் நாற்பது நாட்களும் வேறு சில அறிவிப்புகளில் அதை விட கூடுதலான நாட்கள் ஓதியதாகவும் வந்துள்ளன.

عَنْ أنس رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَنَتَ رَسُولُ اللَّهِ ﷺ شهرا بعد الركوع، يدعو على أحياء من العرب. (صحيح البخاري : 3861)

நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரபிக் கோத்திரங்களில் சில கோத்திரங்களுக்கு எதிராக தொழுகையில் ருகூவுக்குப் பின்னால் முப்பது நாட்கள் துஆக் கேட்டார்கள் என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி: 3861)

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ، … فَقَتَلُوهُمْ إِلَّا رَجُلًا أَعْرَجَ صَعِدَ الجَبَلَ، … فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوُا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري : 2801)

நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் மாறு செய்த ரஃல், ஸக்வான், பனூ லஹ்யான் மற்றும் பனூ உஸைய்யா ஆகியோருக்கு எதிராக நாற்பது நாட்கள் துஆக் கேட்டார்கள் என அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி: 2081)

சோதனைகள் நீங்கும் வரை ஓதுதல்:

இது விடயமாக வந்துள்ள ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து சோதனைகள் நீங்கும்வரை குனூத்துன் நாஸிலாவை ஓதுவது ஸுன்னத்தாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.3

மஸ்ஜிதுல் அக்ஸா, பலஸ்தீன் மற்றும் காஸாவுக்காக பிரார்த்தித்தல்:

பலஸ்தீன், காஸா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கு அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தோழுகைகளில் குனூத்துன் நாஸிலாவை ஒதிவருமாறு கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்னர் ஜம்இய்யா அறிவித்திருந்தது.

இதனை ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் உள்ள இமாம்கள், கதீப்மார்கள் மற்றும் மஸ்ஜித் நிர்வாகிகளாகிய தாங்கள் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறைப்படுத்தி வந்தீர்கள். அல்லாஹு தஆலா எம் அனைவரது பிராரத்தனைகளையும் ஏற்று அருள்வானாக!

எனினும், சில மஸ்ஜித்களில் மக்களுக்கு சிரமமும் சடைவும் ஏற்படுமளவுக்கு குனூத்துன் நாஸிலா நீட்டப்படுகின்றன என்ற செய்திகள் ஜம்இய்யாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆகவே, பலஸ்தீன் மற்றும் காஸாவில் தொடர்ந்தும் மக்கள் அகோரமாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும், தற்போது நிலைமை துஆக்களின் பக்கம் தேவைப்படுவதனாலும் இமாம்கள் மற்றும் கதீப்மார்கள் மக்கள் சடைவுக்குள்ளாகாத வகையில் உங்களது மஹல்லாக்களின் நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு சுருக்கமாக ஐவேளைத் தொழுகைகளில் அல்லது மக்கள் அதிகமாக ஒன்று சேரும் தொழுகையில் அல்லது பஜ்ருத் தொழுகையில் தொடர்ந்தும் குனூத்துன் நாஸிலாவில் பின்வரும் துஆக்களை ஓதிவருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

அத்துடன் அங்கு அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு பிரார்த்திக்குமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ

اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ

اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ

اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ

எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

 

அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ்
செயலாளர் – ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


[1] عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللَّهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ وَإِمَّا أَنْ يَصْرِفَ عنهُ من السُّوءِ مثلَها» قَالُوا: إِذنْ نُكثرُ قَالَ: «الله أَكثر» . (سنن الترمذي – 194)

[2] قال النووي: “رواه أبو داود بإسناد حسن أو صحيح” (المجموع 3/ 482). وقال ابن القيم: “وهو حديث صحيح” (زاد المعاد 1/ 280). وقال ابن حجر: “هذا حديث حسن” (نتائج الأفكار 2/ 130)

[3] وَلَكِنْ قَنَتَ لِنَازِلَةٍ ثُمَّ تَرَكَ لِزَوَالِهَا وَكَذَلِكَ إِنْ نَزَلَتْ بِالْمُسْلِمِينَ نَازِلَةٌ وَلَنْ يُنْزِلَهَا اللَّهُ تَعَالَى فَلَا بَأْسَ أَنْ يَقْنُتَ الْإِمَامُ فِي سَائِرِ الصَّلَوَاتِ حَتَّى يَكْشِفَهَا اللَّهُ تَعَالَى كَمَا قَنَتَ رَسُولُ اللَّهِ ﷺ َ – حِينَ أَسَرَتْ قُرَيْشٌ مَنْ أَسَرَتْ، وَقُتِلَ مِنَ الصَّحَابَةِ عِنْدَ بِئْرِ مَعُونَةَ مَنْ قُتِل. الحاوي الكبير ٢/‏١٥٢ – الماوردي (ت ٤٥٠)

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன