‘டிட்வா’ அனர்த்த நிலைமைகளையடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்தில் செயற்பட்டு வந்த அனர்த்த நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தினால் (RCC) மேற்கொள்ளப்பட்ட உடனடி உதவி ஒருங்கிணைப்புப் பணிகள் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, 2025 டிசம்பர் 10 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது, இதுவரை பாதிக்கப்பட்ட எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும், மேலும் எந்தெந்த பகுதிகளில் எந்தவகையான உதவிகள் தேவையாக உள்ளன என்பதையும் தெளிவுபடுத்தும் தரவுகள் மற்றும் அறிக்கைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
அத்துடன், தேவைகள் அதிகமாகக் காணப்படும் மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களை இனங்கண்டு, இரண்டாம் கட்ட அனர்த்த நிவாரண உதவிப் பணிகளை துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மஸ்ஜிது சம்மேளனங்களின் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



– ACJU Media –


