2026.02.12
1447.08.23
ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதம் நம்மை கடந்து சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த ரமழான் மாதத்தின் உச்ச பயனை நாம் அடைந்து கொண்டோமா? அதிலிருந்து நாம் எவ்வளவு ஆன்மீக பலனை பெற்றுக் கொண்டோம்? மேலும் முன்னோக்கிக் கொண்டிருக்கும் ரமழானை இன்னும் சிறப்பாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திற் கொண்டு ஒவ்வொருவரும் சீரிய சுய பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு (லைலத்துல் கத்ர்) அடங்கிய, அல்லாஹ்வை நெருங்குவதற்கான பல வழிகளையும் வாய்ப்புகளையும் கொண்ட நன்மைகளின் பருவ காலமான புனித ரமழான் மாதத்தை உரிய திட்டமிடலின்றி வீணாகக் கழிப்பது ஒரு பெரிய இழப்பாகும். அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘لا عقل كالتدبير’ திட்டமிடலை விட புத்திசாலிதனம் வேறில்லை. அதன் அடிப்படையில் வருகிற ரமழானை திட்டமிட்டு, முறையாக பயன்படுத்தி உச்ச பலன்களையும் நன்மைகளையும் அடையும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் வழிகாட்டல்கள் பின்வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டல் ஒவ்வொரு தனிநபர் வாழ்வையும், வீட்டு சூழலையும் இன்னும் மஹல்லாக்களையும் இலக்காக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நோக்கம்:
❖ புனித ரமழான் மாதத்தை இலக்கு நோக்கியதாக (பயனுள்ளதாக) பயன்படுத்த உதவுதல்.
❖ ஒவ்வொருவருக்கும் சுய பரிசோதனை செய்ய வழிகாட்டுதல்.
❖ ஆன்மீக வளர்ச்சிக்கான தெளிவான திட்டமிடலை உருவாக்குதல்.
தனிநபர் தயாரிப்பு:
• தூய எண்ணமும் துஆ பிராத்தனையும்:
அல்லாஹ்வின் திருப்தியையும் மறுமை நாளின் வெற்றியையும் இறையச்சத்தையும் அடையும் நோக்கை இலக்காக கொண்டு தேக ஆரோக்கியத்துடன் நன்மைகளின் பருவ காலமான புனித ரமழான் மாதத்தை அடைந்து நற்கருமங்களைச் செய்து அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை அடைந்த அடியானாக மாற முயற்சிகளை மேற்கொள்வதுடன் துஆவும் செய்தல்.
• சுயபரிசோதனை செய்தல்:
ஒவ்வொருவரும் தங்களிடம் தாங்களே சில கேள்விகளை கேட்க வேண்டும்.
1. கடந்த ரமழானில் நான் என் நேரத்தை எவ்வாறு பயன்படுத்தினேன்?
2. புனித அல்-குர்ஆன், தொழுகை, துஆ, திக்ர், தர்மம், சுன்னத்தான வணக்க வழிபாடுகள் போன்ற இபாதத்துகளில் என்ன முன்னேற்றம் இருந்தது?
3. என்ன குறைகள் இருந்தன? அவற்றை இந்த வருடம் எவ்வாறு திருத்தலாம்?
இயன்ற வரை நற்கருமங்களில் முந்திக்கொண்டு அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு அல்லாஹ்வின் திருப்தியை பெறுவேன் என மன உறுதி கொள்ளல்.
அனைத்து பாவங்களிலிருந்தும் உள்ளம் உருகி மன உறுதியுடன் பாவ மன்னிப்புத் தேடி அல்லாஹ்விடம் மீண்டு, பாவமற்ற தூய அடியானாக புனித ரமழான் மாதத்திற்கு தயாராகுதல்.
• ரமழான் மாதத்தின் வருகையை நினைத்து மகிழ்ச்சியடைதல்:
ஒரு முஃமினின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ரமழானின் நாட்கள். சுவர்க்க வாயில்கள் திறக்கப்பட்டு நரக வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு ஒவ்வொரு இரவும் நரக விடுதலை செய்யப்படும் லைலதுல் கத்ர் எனும் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவுள்ள பாக்கியங்கள் நிறைந்த சிறப்புமிகு ரமழானின் வருகையை நினைத்து மகிழ்ச்சியடைதல்.
• இலக்குகளை நிர்ணயித்தல்:
✔ கடமையான அனைத்து நோன்புகளையும் தவற விடாது முழுமையாக நோற்றல்.
✔ பர்ழான ஐந்து நேர தொழுகைகளை நேர்த்தியாக தொழுதல்.
✔ அதிகமதிகமாக துஆ மற்றும் திக்ர் செய்தல்.
✔ நல்லொழுக்கங்களை மேம்படுத்தல்.
• செயல் திட்டம்:
ரமழான் மாதம் மிக வேகமாக நகர்ந்து விடும்; அதன் ஒவ்வொரு நொடியையும் நிமிடத்தையும் திட்டமிட்டு செயற்படுவது அவசியமாகும். ஒரு நாளுடைய 24 மணி நேரத்தை சரியாக திட்டமிட 18 வழிகள்:
1. பர்ழான தொழுகைகளை இமாம் ஜமாஅத்துடன் கூட்டாக தொழுதல்.
2. முன் பின் சுன்னத்தான தொழுகைகளை தவறாது தொழுதல்.
3. பஜ்ர் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு ஓத வேண்டிய காலை திக்ருகள், பிரார்த்தனைகளை நிறைவேற்றல்.
4. ழுஹா தொழுகையை வழமையாக்கிக் கொள்ளுதல்.
5. இரவு வணக்கங்களுக்காக பகல் பொழுதில் சற்று தூங்கி எழுந்து தன்னை தயாராக்கிக் கொள்ளல்.
6. காலை, மாலை அவ்ராத்துகளை பேணுதலாக தொடர்ச்சியாக செய்து வருதல்.
7. தான தர்மங்களை செய்தல்.
8. தராவீஹ் மற்றும் இரவு தொழுகைகளை நிறைவேற்றல்.
9. இரவில் எழுந்து தனக்கும் முழு உம்மத்திற்கும் பாவ மன்னிப்பு கேட்டு நலவுக்காக துஆ செய்தல்.
10. மார்க்க மஜ்லிஸ்களில் முனைப்பு காட்டுதல்.
11. புனித அல்-குர்ஆனை சரியாக ஓத கற்றுக் கொள்ளல்.
12. குறைந்தது புனித அல்-குர்ஆனை மாதத்தில் ஒரு முறையேனும் ஓதி முடித்தல்.
13. குறைந்தது ஒவ்வொரு நாளும் ஒரு நபருக்கேனும் நோன்பு திறக்க உதவி செய்தல்.
14. சுத்தமாகவும் அழகான தோற்றத்திலும் தன்னையும் தன் சூழலையும் வைத்துக் கொள்ளல்.
15. சொந்த பந்தங்களுக்கு உதவுதல்.
16. ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தை அடைவதற்கு முன் நோன்பு பெருநாளுக்காக தன்னை தயார் படுத்தல்.
17. கடைசி பத்து நாட்களை மஸ்ஜிதில் தரிக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளல்.
18. தனது பொறுப்பில் உள்ள 07 வயதை அடைந்த சிறார்களை நோன்பு நோற்க ஆர்வமூட்டல்.
• நோன்பின் பலனையும் நன்மைகளையும் சிதறடிக்கும் செயல்களை முற்றாக தவிர்த்தல்:
1. நோன்பை முறிக்கும் அனைத்து காரியங்களிலிருந்தும் முற்றாக தவிர்ந்து கொள்ளல்.
2. உடல் உறுப்புக்களை பாவங்களை விட்டு பேணிக் கொள்ளல். குறிப்பாக நாவையும், கண்களையும், காதுகளையும் வீணானவைகளை விட்டு முற்றாக பாதுகாத்தல். (பொய் பேசுதல், புறம் பேசுதல், இட்டுக்கட்டல், மற்றவர்களின் குறைகளுக்கு காது கொடுத்தல் அத்துடன் குறைகளையும் பாவங்களையும் பார்த்து ரசித்தல்)
3. அருள் நிறைந்த புனித ரமழான் மாதத்தின் பகல் பொழுதை தூங்கிக் கழிக்காதிருத்தல்.
4. விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் போன்ற எந்த பயனற்ற காரியங்களிலும் நேரம் வீணாகாமல் அவதானமாக இருத்தல்.
5. இரவு நேரத்தில் யாருக்கும் தொல்லையின்றி மஸ்ஜிதிலிருந்து வீடுகளுக்கு செல்லுதல்.
6. அயல் வீட்டார் மற்றும் பிரயாணிகளுக்கு தொல்லையின்றி இருத்தல்.
7. ஹராமான தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல்.
8. கையடக்க தொலைபேசிகளில் நேரம் வீணாகுவதை முற்றாக தவிர்த்தல்.
9. ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தை கடைத் தெருக்களில் கழிப்பதை தவிர்தல்.
10. சண்டை மற்றும் வாய்த் தர்க்கங்களை முற்றாக தவிர்த்தல்.
• பெண்களுக்கான சில வழிகாட்டல்கள்:
1. கையடக்க தொலைபேசில் நேரம் வீணகுவதை முற்றாக தவிர்த்தல்.
2. அதிக நேரம் சமையலறையில் செலவிடுவதை தவிர்த்து அமல்களில் அதிக கவனம் செலுத்துதல்.
3. வியாபார நிலையங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்த்தல்.
4. மாதவிடாய் நாட்களில் தொழுகை, அல்-குர்ஆன் ஓதுதல், நோன்பு போன்றவைகள் கடமையாகாது என்பதால் ஏனைய நல்லமல்களில் அதிக கவனம் செலுத்தல்.
5. பெண்களுடன் சம்பந்தப்பட்ட மார்க்க சட்டங்களை ரமழானுக்கு முன்னால் அறிந்து கொள்ளல்.
• தொடர்ச்சியான மதிப்பீடு:
இந்த ரமழான் மாதமே எனது கடைசி ரமழான் என்ற சிந்தனையுடன் நேரத்தை மதிப்பிடல்.
ஒவ்வொரு நாளும் தன்னைத் தானே பரிசோதித்தல்.
வாரம் ஒருமுறை அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல்.
குறைகள் இருப்பின் உடனடியாக திருத்திக் கொள்ளல்.
நல்ல முன்னேற்றம் இருந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி மேலும் முயற்சி செய்தல்.
குறிப்பு:
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அமல்களின் அட்டவணையை சரிவர அவதானித்து அமல்களை நிறைவேற்ற குடும்பத்தில் ஒவ்வொருவரும் பூரணப்படுத்துங்கள்.
2. இந்த வழிகாட்டல் குறித்து ஒவ்வொரு மாவட்ட ஜம்இய்யாவும் பிராந்திய கிளைகளுடன் கலந்தாலோசித்து மஸ்ஜிதினூடாக ஒவ்வொரு வீடுகளிலும் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகளை செய்யவும்.
– பிரச்சாரக் குழு –




