அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் 1447 ரமழான் வாழ்த்துச் செய்தி!

ACJU/NGS/2026/029
2026.02.19 (1447.09.01)

சங்கைமிகு ரமழான் மாதம் என்பது அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் மிகச் சிறந்ததோர் அருட்கொடையாகும்

இம்மாதத்தில்தான் அல்லாஹு தஆலா புனிதமிகு அல்-குர்ஆனை இறுதிவேதமாக அருளியுள்ளான். இம்மாதம் நன்மைகளையும் அருட்கொடைகளையும் பல பாக்கியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள, ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட மாதமாகத் திகழ்கின்றது.

ரமழான் மாதத்தைப் பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:
“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தக்வா – உடையோர் ஆகலாம்.” (அல்-குர்ஆன் 2:183)

(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்). ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக – ஃபித்யாவாக – ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (அல்-குர்ஆன் 2:184)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்தார்கள். அதில் குறிப்பிடுகையில், ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஓர் இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை ஸுன்னத் ஆக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்ழான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஒரு ஃபர்ழான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்ழான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். (நூல் : பைஹக்கீ)

அல்லாஹ்வின் இறுதித்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘ரமழான் மாதத்தின் முதல் நாள் இரவு வந்துவிட்டால் ஷைத்தான்களும் முரண்டுபிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அவற்றில் எதுவும் திறக்கப்படுவதில்லை. சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் எதுவும் அடைக்கப்படுவதில்லை.’ (இப்னு மாஜா : 1632)

இப்புனிதமான மாதத்தில் அல்லாஹு தஆலா எந்த நோக்கத்திற்காக நோன்பைக் கடமையாக்கினானோ அதனை அடைந்து அவனுடைய ரஹ்மத்தையும் பாவமன்னிப்பையும் நரக விடுதலையையும் லைலத்துல் கத்ர் இரவையும் அடைந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்து நல்லருள் புரிவானாக!

பகல் பொழுதுகளில் நோன்பின் மாண்புகளைப் பேணி நடந்துகொள்வதுடன் இரவு காலங்களை தராவீஹ் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் அதிகமான நேரங்களை அல்-குர்ஆனுடனான தொடர்புடன் இருப்பதற்கும், குறிப்பாகவும் விசேடமாகவும் ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பான புனித லைலத்துல் கத்ர் எனும் இரவினை அடைந்துகொள்வதற்கும் முழுமையாக முயற்சிக்க வேண்டும்.

உலகளாவிய ரீதியில் பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டுள்ள அனைவருக்காகவும் நாம் பிரார்த்திப்பதுடன், இம்மாதத்தின் அருள்களை கருணை, தாராள மனப்பான்மையுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

யா அல்லாஹ்! இந்த இளம்பிறையை பாதுகாப்பைக் கொண்டும் நம்பிக்கையைக் கொண்டும் ஈடேற்றத்தைக் கொண்டும் சாந்தியைக் கொண்டும் தோன்ற வைப்பாயாக. (இளம்பிறையே!) உன்னுடைய இரட்சகனும் என்னுடைய இரட்சகனும் அல்லாஹ் ஆவான்.

யா அல்லாஹ்! என்னை ரமழானிடம் ஒப்படைத்து ரமழானை எனக்கு பயனுள்ளதாக ஆக்கி என்னிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அதை விடுவிப்பாயாக!

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன