ACJU/HIL/2020/002
ஹிஜ்ரி 1441.10.27 (2020.06.19)
சூரிய, சந்திர கிரகணங்கள் தொடர்பான வழிகாட்டல்
இம்மாதம் (ஜூன்) 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணமும் எதிர்வரும் ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணமும் இன்ஷா அல்லாஹ் ஏற்படவுள்ளதாக வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் உலகில் பல பாகங்களில் வலைய சூரிய கிரகணமாக (Annular Solar Eclipse) தென்படும் அதேவேளை இலங்கையில் கொழும்பு நேரப்படி மு.ப. 10:29 மணி முதல் பி.ப. 01:19 மணி வரை பகுதி சூரியக் கிரகணமாக (Partial Solar Eclipse) தென்படும் என அவ்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சந்திரக் கிரகணம் புறநிழல் சந்திர கிரகணம் (Penumbral Lunar Eclipse) எனவும் அது இலங்கைக்குத் தென்படாது என்றும் வானியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சூரியன் மற்றும் சந்திரன் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவருடைய மரணத்திற்காகவோ அல்லது ஒருவரின் பிறப்பிற்காகவோ அவை மறைவதில்லை. அவற்றை மறையக் கண்டால் அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள், தக்பீர் சொல்லுங்கள், தொழுகையில் ஈடுபடுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி – 1044)
எனவே, இம்மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்தை ஒருவர் நேரில் காணும்போது அல்லது கண்டவர்கள் பலரும் அறிவிக்கும் போது கிரகணத் தொழுகையை நிறைவேற்றலாம். கிரகணத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்படுவது வலியுறுத்தப்பட்ட ஸுன்னத்தாகும் என்பதால் கிரகணத் தொழுகையைக் கூட்டாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை மற்றும் சமூக இடைவெளிபேணல் போன்ற விடயங்களில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனத்திற் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் ஆலிம்களைக் கேட்டுக் கொள்கிறது.
அஷ்-ஷைக் எம். அப்துல் வஹ்ஹாப்
பிறைக் குழு இணைப்பாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா




