மாண்புமிகு மலேசியப் பிரதமர் அன்வர் பின் இப்ராஹிம் அவர்களே!
உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் மாண்புமிகு கலாநிதி. முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா அவர்களே!
மாண்புமிகு மலேசிய கலாச்சார அமைச்சர் கலாநிதி. ஹாஜ் முஹ்த் நயீம் பின் ஹாஜி முக்தார் அவர்களே!
மற்றும் அனைத்து சிறப்பு விருந்தினர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே!
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக; அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு!
உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காகவும் இந்த மதிப்புமிக்க கூட்டத்தில் உரையாற்ற எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காகவும் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் மற்றும் பிரதம மந்திரி ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை மற்றும் மலேசியா:
இலங்கையும் மலேசியாவும் எப்பொழுதும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவினை மிகுந்த ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் சுமுகமாகவும் பகிர்ந்து கொள்ளக்கூடியவையாக திகழ்கின்றன. இலங்கைக்கும் மலாய் தீபகற்பத்திற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்கள் மற்றும் அரேபியர்கள்:
வரலாற்றில் இலங்கையும் அரபு நாடுகளும் பரஸ்பரம் வளங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் வலுவான உறவுகளைக் கொண்டிருந்தன என்பது வரலாற்று உண்மை. நவீன காலத்தில் மனித வளங்கள் இலங்கையினால் வழங்கப்படுகின்றன. அதேவேளை நிதி, கனிமங்கள் மற்றும் ஏனைய வளங்கள் மத்திய கிழக்கு நாடுகளினால் இலங்கைக்கும் வழங்கப்படுகின்றன.
இஸ்லாம் வருவதற்கு முன்னரே இலங்கையர்களுக்கும் அரேபியர்களுக்கும் உறவுகள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை மற்றும் சவுதி அரேபியா:
07ஆம் நூற்றாண்டில், இலங்கையின் மூன்றாம் அக்ரபோதி மன்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் அரேபியாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார். ஆனால் அவர்கள் கலீஃபா உமரின் காலத்தில்தான் மக்காவை அடைந்தனர். சவால்களை எதிர்கொண்ட போதிலும் அவர்களின் பயணம் அரேபிய வர்த்தகர்களுக்கும் இலங்கை அரச குடும்பத்திற்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
உலக முஸ்லிம் லீக் & இலங்கை:
உலக முஸ்லீம் லீக் – ராஃபிததுல் ஆலமி அல்-இஸ்லாமிய்யாவானது உலகளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் சமூகம் மற்றும் இஸ்லாமிய பங்களிப்புகளின் காரணமாக சர்வதேச சமூகத்தில் சமூகத்தில் செல்வாக்குமிக்கதாக அறியப்படுகிறது. 1962 இல் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் உலக லீக், அதன் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரை அதன் அரசியலமைப்பு சபையின் ஸ்தாபக உறுப்பினராக தெரிவு செய்து இலங்கையை அங்கீகரித்தது.
பொதுச் செயலாளர் – உலக முஸ்லிம் லீக்:
மாண்புமிகு கலாநிதி முகமது அப்துல் கரீம் அல்-இஸ்ஸா, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக செயற்படக்கூடிய, வாதாடக்கூடிய வலுவான ஒருவராவார். அவர் முஸ்லிம்களின் இரண்டு புனிதத்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்-சவுத் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் பயணம் செய்து இதனை சாதித்துக்காட்டினார். அல்லாஹ் அவருடைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைத் தருவானாக! அவருடைய அனைத்து முயற்சிகளையும் ஏற்றுக்கொள்வானாக!
இக்கட்டான காலகட்டத்தில் மாண்புமிகு கலாநிதி அல்-இஸ்ஸாவின் பங்களிப்பு:
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கலாநிதி மொஹமட் பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவின் இலங்கை விஜயம் சமூகங்களுக்கிடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. கொழும்பில் நடைபெற்ற அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய மாநாடு நாட்டில் அமைதியையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்க வகையில் நெருக்கடியான சூழ்நிலையை சாதகமாக மாற்றியது.
உலக முஸ்லிம் லீக் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா:
உலக முஸ்லிம் லீக் மற்றும் ஜம்இய்யா ஆகியவை அந்தந்த நிறுவனங்களிலிருந்து ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பார்வையைப் பகிர்ந்து கொண்டன.
2004 முதல் 2024 வரை நான் உலக முஸ்லிம் லீக்குடன் வலுவான உறவுகளைப் பேணி வந்திருக்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் அமைதியான, சகவாழ்வுக்கான அவர்களின் உலகளாவிய பார்வைக்கு ஒத்துழைப்பினை வாங்கியிருக்கிறேன்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் மலேசியா:
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மலேசியாவில் உள்ள மத அறிஞர்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டிருக்கிறது. ஹலால் சான்றிதழ் மற்றும் இஸ்லாமிய வங்கி போன்ற விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பினை மலேசியாவானது எமக்கு வழங்கியது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜம்இய்யாவானது பரஸ்பர நிபுணத்துவ பரிமாற்றத்திற்கு பங்களித்து மலேசிய அறிவுஜீவிகளுடன் சுமுகமான உறவைப் பேணி வருகின்றது.
வேற்றுமையில் ஒற்றுமை & அமைதியான சகவாழ்வு:
மனித சமத்துவம் மற்றும் சகவாழ்வுக்கு மனித கண்ணியம் அடிப்படையானதாகும். மனித இனம் முழுவதும் ஒரே குடும்பம். திருக்குர்ஆன் மனிதகுலத்தின் கண்ணியத்தை வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِیۤ ءَادَمَ وَحَمَلۡنَـٰهُمۡ فِی ٱلۡبَرِّ وَٱلۡبَحۡۡرِّ وَٱلۡبَحۡۡرَمِينَ طَّیِّبَـٰتِ وَفَضَّلۡنَـٰهُمۡ عَلَىٰ كَثِیرࣲ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضیلیل
“நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.” (ஸூரா : 17 : 70)
‘ஆதமின் குழந்தைகள்’ என்ற சொல் இனம், நிறம் அல்லது பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் அனைத்து வகையான பாகுபாடுகளையும் முற்றிலும் விலக்குகிறது. குடிகள், தேசங்கள் மற்றும் இனங்களாகப் வேறுபட்டிருப்பதானது மொழி, கலாச்சாரம், தேசிய வளங்கள் மற்றும் இன்னபிற நல்ல குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை காட்டுவதற்கும் அதன் மூலம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பயனடைந்துகொள்வதற்காகவுமேயாகும்.
மக்கள் ஒருவரையொருவர் மிகைக்கும் ஒரே உண்மையான அளவுகோல் இறையச்சம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் நீதியான செயல்களின் செயல்திறன் மட்டுமே.
ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய இறை செய்தி:
திருக்குர்ஆன் கூறுகிறது:
وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍۢ ۗ
“அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் – இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் – பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.” (ஸூரா : 06 : 108)
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ٦
“உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.” (ஸூரா : 109 : 06)
لَآ إِكْرَاهَ فِى ٱلدِّينِ ۖ
“(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை.”(ஸூரா : 02 : 256)
لَّا يَنْهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَـٰتِلُوكُمْ فِى ٱلدِّينِ وَلَمُرِينِ يُخۡ ُمْ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓا۟ إِلَيْهِمْ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
“மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.” (ஸூரா : 60 : 08)
சகவாழ்வின் நான்கு நிலைகள்:
மனிதகுலத்தின் வெற்றியும் செழுமையும் நல்ல குணங்களை வலுப்படுத்துவதிலும், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை நிலைநிறுத்துவதிலுமே பெரிதும் சார்ந்துள்ளது. குர்ஆன் வசனங்கள் மற்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது போதனைகளின் அடிப்படையில் சமூகங்களுக்குள் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு நான்கு படிநிலைகள் உள்ளன.
التعارف – ஒருவரையொருவர் அறிமுகப்படுத்துதல்.
التفاهم – ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை உருவாக்குதல்.
التسامح – ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையினை கடைபிடித்தல்.
التعاون – அனுமதிக்கப்பட்ட விடயங்களில் ஒத்துழைக்கும் நிலையில் ஆதரவை விரிவுபடுத்துதல்.
நவீன காலத்தில் அதிகரித்து வரும் சவால்களுடன் சமூகங்களுக்கு இடையே பாலங்களை வலுப்படுத்தும் முயற்சிகளின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
சமூகத் தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் பிற மதத் தலைவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதானது மதங்களிடையேயான வெற்றிடங்களை நிரப்புவதற்கும் மிதமான சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கியமானது.
நாங்கள் பின்வரும் அணுகுமுறையை செயல்படுத்தி சாதகமான முடிவுகளை அடைந்துள்ளோம் அல்ஹம்துலில்லாஹ்!
1. சமாதான மையம் & தேசிய வலையமைப்பு திட்டம் – (NNP)
சமூகங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களுக்கு இடையிலான உறவுகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் ‘நல்லிணக்க மையம்’ மற்றும் தேசிய வலையமைப்பு திட்டம் (NNP) ஆகியவற்றை நாங்கள் ஏற்படுத்தினோம்.
2. குர்ஆன் மொழிபெயர்ப்பு – சிங்களம்
மற்ற மதங்களுக்கிடையில் தவறான எண்ணங்களின் முக்கிய காரணங்களை அடையாளம் கண்டு, புரிந்துகொண்டதனால் ஏறக்குறைய சுமார் எட்டு வருட முயற்சியின் விளைவாக ஜம்இய்யாவினால் சிங்கள மொழியில் புனித குர்ஆனின் விளக்கத்தை தொகுக்க முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
3. சமாஜ சங்வாத – சமூக உரையாடல் புத்தகத் தொடர்
சமூக உரையாடல் புத்தகத் தொடரான சமாஜ சங்வாதவின் வெளியீடுகள் சில அம்சங்களைப் பற்றிய தவறான எண்ணங்களைத் தெளிவுபடுத்தியதோடு சமூகங்களுக்குள் ஒரு நல்ல புரிதலையும் வலுவான பிணைப்பையும் வெற்றிகரமாக உருவாக்கியது.
இந்தத் தொடர் 06 தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைப்புகளை தெளிவுபடுத்தியது. எனினும் அதில் பல சந்தேகங்கள் அடிக்கடி எழுப்பப்பட்டன:
இறைச்சி உண்ணுதல், முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி, மஸ்ஜிதுகளின் அதிகரிப்பு, ஆசிய நாடுகளின் இஸ்லாமியமயமாக்கல், முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டு மற்றும் இஸ்லாமிய ஆடை கட்டுப்பாடு பற்றிய பகுப்பாய்வு.
நம்மைச் சுற்றியுள்ள உலகில் சமகால சவால்கள் இருப்பதால் சமூகங்களுக்கிடையில் பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு இதுபோன்ற முயற்சிகளை எளிதாக்குவது கட்டாயமாகும்.
வேற்றுமைக்குள் ஒற்றுமை:
சமூகங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வை அடைவதற்கு முஸ்லிம்களாகிய நாம் பலதரப்பட்ட கருத்துக்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டுவது முக்கியம்.
திருக்குர்ஆன் கூறுகிறது:
وَٱعْتَصِمُوا۟ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعًۭا وَلَا تَفَرَّقُوا۟ ۚ وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ إِذْ كُنتُمْ أَعْدَآءًۭ فَأَلَّفَ بَيْنَ قُلُوبِكُمْ فَأَصْبَحْتُم بِنِعْمَتِهِۦٓ إِخْوَٰنًۭا
“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஸூரா : 03 : 103)
وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَا تَنَـٰزَعُوا۟ فَتَفْشَلُوا۟ وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ وَٱصْبِرُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ
“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (ஸூரா : 08 : 46)
இது ஹதீஸில் பதிவாகியுள்ளது:
فعليكم بالجماعة، فإنما يأكل الذئب من الغنم القاصية
“நீங்கள் கூட்டாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஓநாய் தனியாக அலைந்து திரியும் ஆடுகளையே சாப்பிடுகிறது.” (அல்-நஸாயி)
இது காலத்தின் அவசர அழைப்பு என்றும் முழு முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் இவ் உடன்படிக்கையை மீட்டெடுக்க உடனடியாகச் செயல்படுவது மறுக்க முடியாத மார்க்கக் கடமை என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
எங்கள் அணுகுமுறை:
1. ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவை நிறுவுதல் – CCC
ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு இஸ்லாமிய சிந்தனைக் கூடங்கள் மற்றும் தஃவா அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற இஸ்லாமிய மத அறிஞர்களைக் கொண்ட ஒரு அமைப்பை நிறுவுவது குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும். இந்த அமைப்பு ‘ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுவதற்காக நியமிக்கப்பட்டது.
2. ஒற்றுமை பிரகடனம்
உம்மத்தில் ஒற்றுமையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆன்மீக வாழ்க்கையைத் தொடர சில வழிகாட்டுதல்கள் ‘ஒற்றுமைப் பிரகடனம்’ வடிவத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
ஜம்இய்யாவின் ஒற்றுமைப் பிரகடனத்தின் சுருக்கம்:
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கருத்துப்படி இலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் தமது சமயச் சடங்குகளையும் கடமைகளையும் நிறைவேற்றி வந்துள்ளனர். ஷரீஅத்தின் வெவ்வேறு கருத்துக்கள் அனைத்தும் மனித குலத்தின் நல்வாழ்வை நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர்களின் ஒட்டுமொத்த நோக்கத்தில் வேறுபட்ட அறிஞர்கள் அனைவரும் சமமாக இருந்தனர்.
பின்வரும் ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இஸ்லாத்தின் கண்ணியத்தையும் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும்.
• இஸ்லாமிய அறிஞர்களால் எழுப்பப்படும் கருத்து முரண்பாடுகள் இறுதியில் சமூகத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதுடன் அவை முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் ஏற்றால்.
• கருத்து வேறுபாடுகள் உண்மையில் அனுமானங்களை வலுப்படுத்தவும் சிந்தனையை பல்வகைப்படுத்தவும் உதவுகின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதோடு புதிய கண்ணோட்டத்தில் இருந்து சிந்திக்கும் தன்மையை ஊக்குவித்து சிக்கல்களை பரந்த வெளிச்சத்தில் பார்க்கவும் உதவுகிறது.
• கருத்து வேறுபாடுகளின் போது பரஸ்பர மரியாதையுடன் செயல்படுதல்.
• நாம் உரிமையும் சுதந்திரமும் பெற்றிருப்பதால் மற்றவர்களுக்கும் அவர்களின் நம்பிக்கையின்படி செயல்பட உரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வது.
இந்த அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சிறந்த புரிதலை உருவாக்கியது. மேலும் இந்த அணுகுமுறை முஸ்லிம்களிடையே ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அணுகுமுறையை உலகின் பிற பகுதிகளிலும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.
ஜம்இய்யா எப்பொழுதும் நம்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுகிறது.
01. இபாதா, இஸ்திக்ஃபார் மற்றும் தவ்பா குறித்து முஸ்லிம் சமூகத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
02. உரையாடல் மற்றும் ஆலோசனை.
03. பொதுமக்களுக்கு உண்மையைக் கற்பித்தல்.
04. நிலையான முயற்சியாக தஃவா
பரிந்துரைகள்:
• எங்களது முயற்சிகள் மற்றும் ஆவணங்களின் தயாரிப்புகள் அனைத்தும் இங்கே வழங்கப்படுகின்றன. புகழ்பெற்ற உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் இதை ஒரு முன்மாதிரியாகக் கருதுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
• சில சமயங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் நவீன இயக்கங்களின் பாதகமான நடைமுறைகள் ஆசிய பசிபிக் நாடுகள் மற்றும் உலகின் பிற பகுதிகள் போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் ஏற்படுத்தலாம்.
• உலகில் பல நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். சிறுபான்மை முஸ்லிமல்லாதவர்கள் மீதான பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளின் நேர்மறையான அணுகுமுறைகள் சிறுபான்மை முஸ்லிம்களின் நாடுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் இது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீது உலகளவில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.
மேலும் பரிந்துரைகள்:
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் நீண்ட கால மூலோபாயத் திட்டத்தை வரைதல்.
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் விலகும் குழுக்கள் மற்றும் தீவிரவாத குழுக்களின் சவால்களை சமாளிக்க நீண்ட கால மூலோபாய திட்டத்தை வரைதல்.
• ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் விலகும் குழுக்கள் மற்றும் தீவிரவாத குழுக்களின் சவால்களை சமாளிக்க ஒரு பொதுவான அமைப்பை உருவாக்குதல்.
இறுதியாக, மலேசியப் பிரதமர் மாண்புமிகு அன்வர் பின் இப்ராஹிம் அவர்களை இலங்கைக்கு விஜயம் செய்து, முஸ்லிம் சமூகம் மற்றும் இலங்கையின் இதர நம்பிக்கைகள் மத்தியில் ஒற்றுமை, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜம்இய்யாவின் முயற்சிகளின் விளைவுகளை நேரில் காணுமாறு அழைக்கிறேன்.
ஜஸக்கல்லாஹு கைரா!