அஷ்-ஷைக் எம். யூசுப் நஜ்முத்தீன் அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் விடுக்கப்படும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2021/007

2021.02.17 (1442.07.04)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னைய நாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்ஷைக் எம். யூசுப் நஜ்முத்தீன் அவர்கள் நேற்றிரவு (2021.02.16) வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த (تعزية) அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

அன்னார் 1972 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், 1985ம் ஆண்டு முதல் கொழும்பு மாவட்டத்தின் முஸ்லிம் விவாகப் பதிவாளராகவும், அகில இலங்கை கதீப்மார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும், கொழும்பு மாவட்டத்திலுள்ள பல மஸ்ஜித்களில் இமாமாகவும் கதீபாகவும் பணியாற்றியுள்ளார்கள். அகில இலங்கை கதீப்மார் சம்மேளனத்தினூடாக கதீப்மார்களுக்கான பல பயிற்சிநெறிகளையும், கருத்தரங்குகளையும் நடாத்தியதோடு கதீப்மார்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலே பாரிய பங்களிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமூகப் பிரச்சினைகளின் போது முன்னின்று செயல்படக்கூடிய ஆளுமை மிக்க ஒருவராகவும் அன்னார் திகழ்ந்தார்கள்.

குறிப்பாக, ஜம்இய்யத்துல் உலமாவின் வளர்ச்சியில் முன்னைய நாள் தலைவர் அஷ்-ஷைக் மர்ஹூம் எம்.எம்.ஏ. முபாறக் மற்றும் முன்னைய நாள் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் மர்ஹூம் எம்.ஜே.எம். ரியாழ் அவர்களின் காலத்தில் அயராது பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்குப் பின்னரும் 2016 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தொடர்ந்தும் செயற்பட்டு தனது பங்களிப்பினை வழங்கினார்.

பல தசாப்தங்கள் சமூகத்துக்காக அரும்பாடுபட்ட அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா அன்னாரது தவறுகளை மன்னித்து, நல்லமல்களை அங்கீகரித்து, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

 

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 
 
 
 

Related Posts

பலத்த மழைவீழ்ச்சி, தொடர் காற்று போன்றவற்றின் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக் கொள்கிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன