அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரத்தினபுரி நகரக் கிளையின் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான ஆன்மீக மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் செயலமர்வு 2026 ஆகஸ்ட் 07அன்று இரத்தினபுரி, அல்-ஜன்னத் மஸ்ஜிதில் சிறப்பாக நடைபெற்றது.
‘மஸ்ஜிதுகளூடாக இளைஞர் சமூகத்தை வலுவூட்டல்’ எனும் ஜம்இய்யாவின் செயற்றிட்டத்திற்கமைய மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், பண்பாடு மற்றும் சிறந்த கல்வியறிவுள்ள மேம்பட்டதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இச்செயலமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு இளைஞர்கள் ஆன்மீக ரீதியில் சிறந்த விளங்க வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அதன் மூலம் ஈருலகிலும் கிடைக்கும் சிறப்புகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜம்இய்யாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ரம்ஸி கிராத்தி அவர்கள், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் தமக்குப் பொருத்தமான கல்வி மற்றும் தொழிற் துறைகளை தெரிவு செய்வது என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்தார்.
இதில், இரத்தினபுரி நகர் பகுதியை சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




– ACJU Media –


