அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் பிரிவு அரபுக் கல்லூரிகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்

2026.04.10 (1447.10.21)
அரபுக் கல்லூரிகள் பிரிவு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நம்மனைவரையும் அவனது தீனுடைய பணிக்காக பொருந்திக் கொள்வானாக. ஆமீன்!

இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகள் (மத்ரஸாக்கள்) மேம்பாட்டுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பல தசாப்தங்களாக பல்வேறு வகையில் உழைத்து வருவதனை நாம் அனைவரும் அறிவோம்.
அவ்வகையில் இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்காக ஜம்இய்யத்துல் உலமாவின் அரபுக் கல்லூரிகள் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அவ்வகையில்,

1- அரபுக் கல்லூரிகளுக்கான தேசிய ரீதியான முறையான அங்கீகாரம் பாதுகாப்பு என்பதனை நோக்காகக் கொண்டு பதிவுக்கான முழுமையான வழிகாட்டல்களை வழங்குதல்.

2- கல்லூரி நிர்வாக கட்டமைப்பு, முகாமைத்துவம் என்பவற்றுக்கு வழகாட்டுவதன் ஊடாக தேசிய ரீதியாக கலாசாலைகள் அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள், நடைமுறை ஒழுங்குகளை கட்டியெழுப்ப உதவுதல்.

3- முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட கல்லூரி பாடத்திட்ட ஒழுங்கமைப்பு மூலம் சகல அரபுக்கலாபீடங்களதும் தரத்தினை மேம்படுத்த வழிவகுத்தல்.

4- ஆசிரியத்துவ மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் ஆசான்களுக்கான தகைமையை உயர்த்த உதவுதல்
போன்ற திட்டங்களை தொடர்ந்தேர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்இய்யாவின் இத்திட்டத்தில் இணைந்து தங்களை மேம்படுத்தி வலுப்படுத்திக் கொள்ள விரும்புகின்ற கல்லூரிகள் மத்ரஸாக்கள் கீழ்வரும் இணைப்பில் சென்று தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

https://forms.gle/XPMPntwT76k3X2TE6

முதற்கட்டமாக, இவ்வருடம் கல்லூரிகளிலிருந்து (மத்ரஸாக்களிலிருந்து) பட்டம் பெற்று வெளியாக இருக்கும் இறுதி வகுப்பு மாணவர்களுக்கு பொதுப் பரீட்சை ஒன்றினை நடாத்தி சான்றிதழ் வழங்கும் ஒழுங்குமுறையை இவ்வாண்டு முதல் ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்பரீட்சையில் ஜம்இய்யாவின் அரபுக்கல்லூரிகள் பிரிவில் இணையும் கல்லூரிகளில் விருப்பமான கல்லூரிகள் பங்கேற்க முடியும்.

இப்பரீட்சை தப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், மற்றும் அரபு மொழி ஆகிய பாடங்களில் முதற்கட்டமாக நடைபெறும்.

குறித்த பாடங்களில் பல்லாண்டு காலம் கற்பித்தல் அனுபவமும் சிறப்புத் தேர்ச்சியும் பெற்ற உஸ்தாத்மார்களினால் பொதுப் பரீட்சை தொடர்பிலான செயலமர்வுகள் மூலம் தேவையான வழிகாட்டல்களை வழங்கவும், மேலும் முன்மாதிரியான மத்ரஸாக்களாகத் தங்களை அமைத்துக் கொள்ள துறைசார்ந்தோர்கள் மூலம் அவசியமான பயிற்சிகளை வழங்கவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.

மத்ரஸாக்கள் மற்றும் ஆலிம்களுடனான ஜம்இய்யாவின் நீண்டகால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றுள்ள இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் மத்ரஸாக்கள் எதிர்வரும் 2026.04.25 ஆம் திகதிக்கு முன்னர் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

முக்கிய குறிப்பு: பதிவு செய்யும் ஒழுங்கிலேயே மத்ரஸாக்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும்.
https://www.acju.lk/ta/documents-ta/

வஸ்ஸலாம்,

அஷ்ஷைக் கலாநிதி ஏ.ஏ.ஏ. அஸ்வர்
செயலாளர் – அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

அஷ்ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக்
தவிசாளர் – அரபுக் கல்லூரிகள் விவகாரப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன