ACJU/FGD/01/001/2025
2025.07.02 (1447.01.06)
முஹர்ரம் மாதத்தின் 10ஆவது நாளுக்கு ஆஷுரா என்று சொல்லப்படும். இந்நாளில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹு தஆலா அநியாயக்கார ஆட்சியாளனாகிய பிர்அவ்னிடமிருந்து பாதுகாத்ததற்காக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு இந்நாளில் நோன்பு நோற்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தினத்தில் நோன்பு நோற்றதோடு, ஸஹாபாக்களுக்கும் நோன்பு நோற்கும்படி ஏவியுள்ளார்கள்.
அந்தவகையில் ஆஷுராவுடைய தினத்தில் நோன்பு நோற்பது சுன்னத்தாக இருப்பதுடன் அந்நோன்பு கடந்த ஒரு வருடத்தில் நிகழ்ந்த (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது.
“ஆஷுரா தினத்தில் நோற்கப்படும் நோன்பை அல்லாஹு தஆலா கடந்த ஒரு வருடத்தின் (சிறிய) பாவங்களுக்குப் பரிகாரமாக்கி விடுவதை நான் ஆதரவு வைக்கின்றேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: ஸுனன் அத்-திர்மிதி -752)
முஹர்ரம் மாதத்தின் 10ஆவது நாளுடன் சேர்த்து 09ஆவது நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். 10ஆவது நாளுடன் சேர்த்து 09ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் 10ஆவது நாளுடன் சேர்த்து 11ஆவது நாளில் நோன்பு நோற்றுக் கொள்வது சுன்னத்தாகும்.
அத்துடன் இம்மூன்று தினங்களிலும் நோன்பு நோற்றுக் கொள்வது விரும்பத்தக்கதாகும் என இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதேவேளை ஒருவர் 10ஆவது நாளில் மாத்திரம் நோன்பு நோற்றுக் கொள்வதாயின் அதற்கும் அனுமதியுள்ளது.
இவ்வருட முஹர்ரம் மாதத்தின் 09,10 மற்றும் 11வது நாட்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய (05, 06, 07.07.2025) தினங்களாகும்.
ஆஷுராவுடைய நோன்பு நாள் குறிப்பிடப்பட்டு ஹதீஸ்களில் வந்துள்ள சுன்னத்தான நோன்புகளில் உள்ளடங்குவதனால் இந்நோன்பை ஞாயிற்றுக்கிழமை தினத்தில் தனித்து நோற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
அல்லாஹு தஆலா எம் அனைவருக்கும் இந்நோன்புகளை நோற்றுக் கொள்ள அருள்புரிவானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எச். உமர்தீன்
பதில் தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.டீ.எம். ஸல்மான்
பதில் செயலாளர் ஃபத்வா குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை






