ACJU/NGS/2026/117
2026.10.10 (1448.04.28)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மருதமுனை பிராந்தியக் கிளையின் தலைவரும், அம்பாறை மாவட்ட ஜம்இய்யாவின் உப தலைவருமான அஷ்-ஷைக் எப்.எம்.எஸ்.ஏ. அன்ஸார் மௌலானா நளீமி (اللهم اغفرله وارحمه) அவர்களது மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அன்னார், பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் 1982ஆம் ஆண்டு மார்க்கக் கல்வியினை கற்று, வெளியேறிய பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு பட்டம் பெற்று 1993ஆம் ஆண்டு அரச ஆசிரியர் சேவையில் இணைந்து கல்விப் பணியினை ஆரம்பித்தார்.
பின்பு, 1999ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமா மற்றும் 2009இல் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பூர்த்தி செய்த அன்னார், 2015இல் ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தேர்ச்சி பெற்றதுடன், மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராக கடமையாற்றி அண்மையிலே தான் தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
அத்தோடு, தனது இறுதிக் காலத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திலும் தனது சுய விருப்பின் பேரில் இணைந்து உயரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். ஜம்இய்யாவின் உப பிரிவுகளின் நிறைகள் மற்றும் தேவைகள் குறித்த ஒரு விரிவான ஆய்வினை மேற்கொண்டிருப்பதாக ஆகஸ்ட் 26 அன்று தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களை சந்தித்து உரையாடிய அன்னார் அதன் இறுதி அறிக்கையினை ஜம்இய்யாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்-ஷைக் வை. எல். எம். நவவீ அவர்களிடம் கையளித்தார்.
அன்னார் மருதமுனை பிரதேசத்திலும் தேசிய ரீதியிலும் இஸ்லாமியக் கல்வி, தஃவா மற்றும் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதுடன் இன நல்லுறவு மற்றும் சகவாழ்வுக்கான முயற்சிகளையும் பணிகளையும் முன்னெடுத்தவராவார் .
அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும். இந்நேரத்தில் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹு தஆலா அவர்கள் இருவருடைய பாவங்களை மன்னித்து, இருவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சுவனத்தை அருள்வானாக!
அவர்களது குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் பொறுமையையும் மன ஆறுதலையும் வழங்குவானாக!
أللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله
“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)”
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா



