அஷ்-ஷைக் ஏ. அபூ உபைதா மதனி அவர்களின் (اللهم اغفرله وارحمه) மறைவையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/153
2025.08.19 (1447.02.24)

மருதமுனையை சேர்ந்த அஷ்-ஷைக் ஏ. அபூ உபைதா மதனி (اللهم اغفرله وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை 2025.08.18ஆம் திகதி சஊதி அரேபியாவில் அல்-குபார் நகர வைத்தியசாலையில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1970இல் வாழைச்சேனை தீனிய்யா அரபுக் கல்லூரியில் மார்க்க கல்வியைக் கற்க ஆரம்பித்து 1971இல் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் சேர்ந்து 1976ஆம் ஆண்டு ஷர்க்கி பட்டம் பெற்று மௌலவியாக வெளியேறினார். அதன் பிறகு மதீனா பல்கலைக்கழகத்தில் தஃவா பிரிவில் பயின்று 1985இல் பட்டம் பெற்று நாடு திரும்பினார்.

தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அஷ்-ஷம்ஸ் தேசிய பாடசாலையில் கற்ற அன்னார், ஆசிரியராக அரச நியமனம் பெற்று மருதமுனை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் கற்பித்ததுடன் மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியிலும் பெரிய நீலாவனையில் அமைந்துள்ள புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்திலும் அதிபராகவும் கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

அன்னார் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக் குழுவின் முன்னாள் உறுப்பினராக இருந்துடன் மருதமுனைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மருதமுனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஸக்காத் நிதியம், மர்கஸ் தஃலீமுல் இஸ்லாம், இஸ்லாமிய வங்கி முறைமைக்கான மஸ்ரஃபுல் இஸ்லாமீ ஆகியவற்றின் உருவாக்கத்தில் முழுமையாக உழைத்தவர் என்பதுடன் மருதமுனையில் அத்வைத கோட்பாடு தலைதூக்கிய போது அதற்கெதிராக முனைப்புடன் செயற்பட்டு தியாகங்களைச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் அன்னாருடைய பிள்ளைகள், குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு மற்றும் அனைத்து ஆலிம்கள் சார்பிலும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்லாஹு தஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களுடைய குற்றங் குறைகளை மன்னித்து பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக!

اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده واغفر لنا وله

“(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே! அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே! எம்மையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!)”

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன