ACJU/NGS/2025/098
2025.06.07 (1446.12.10)
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் இரு பெருநாட்களில் ஒன்றான ஹஜ்ஜுடைய பெருநாளை உலகளாவிய ரீதியிலுள்ள சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொண்டாடிவரும் இந்நாட்களில் இலங்கை முஸ்லிம்களாகிய நாமும் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்!
இந்த ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பெருநாள் தினத்திலே, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜினை நிறைவேற்றுவதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் புறப்பட்ட சுமார் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அரபாவுடைய கடமையினை முடித்தவர்களாக மினாவிலும் மக்காவிலும் ஒன்று திரண்டிருக்கின்றனர். இவர்களில் இலங்கையிலிருந்து எமது நாட்டின் தூதுவர்களாக ஹஜ்ஜுக்கு சென்றிருக்கும் 3,500 ஹாஜிகளும் உள்ளடங்குகின்றனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் ஒரேயொரு முறை நிறைவேற்றிய ஹஜ்ஜிலே அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டி 09ஆம் நாள் அரபா உரையினை நிகழ்த்தினார்கள். ‘ஹஜ்ஜத்துல் வதா’ என போற்றப்படும் அந்த உரையானது மனித உரிமை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றின் முழுமையான பிரகடனமாக திகழ்வதோடு அவற்றை வலியுறுத்தியும் நிற்கிறது. அதனை நினைவுகூரக்கூடிய நாட்களாக நாம் இருக்கும் இந்நாட்கள் திகழ்கின்றன.
அதேபோல நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனது கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு தன் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் இறைவனுக்காகவே அமைத்துக்கொண்ட முன்மாதிரியையும் ஹஜ்ஜுடைய இத்தினங்கள் எமக்கு நினைவூட்டுகின்றன.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதனைகளின் போது கடைப்பிடித்த பொறுமை பற்றியும் அவர்களது தியாக வாழ்வு பற்றியும் அதற்காக இறைவன் அவருக்கு வழங்கிய சிறப்புக்கள் பற்றியும் 25 அத்தியாயங்களில் 63 இடங்களில் அல்-குர்ஆனும் எமக்கு ஞாபகமூட்டுகிறது.
இத்தியாகத் திருநாள் கற்றுத்தரும் பாடங்களான அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிதல், அல்லாஹ்வின் மீதான நேசம், அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை, தவக்குல், முன்மாதிரிமிக்க சிறந்த பிள்ளை வளர்ப்பு, பெற்றோருக்குக் கட்டுப்படல் போன்றவற்றை எமது வாழ்விலும் கடைபிடித்து வாழ்வதோடு எமது குடும்ப உறவுகளிடமும் இவ்வாறான உயர்ந்த பண்புகளை வளர்த்து ஈருலக வாழ்விலும் வெற்றிபெற முயற்சி செய்வோமாக!
அத்தோடு சர்வதேசத்திலும் நம் நாட்டிலும் குறிப்பாக பலஸ்தீன் காஸா பகுதிகளிலும் சமாதானமும் ஐக்கியமும் மலர்ந்திடவும் கஷ்டப்படும் மக்களது நிலமைகள் சீராகிடவும் எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரார்த்தனை செய்கிறது.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.அர்கம் நூராமித்
பொதுச்செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை