இஸ்லாத்தினை அவமதித்த குற்றத்தின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்திக தொடவத்த என்ற நபர் மீதான 03ஆவது ஒத்திவைப்பு வழக்கு 2025.04.28ஆம் திகதி கொழும்பு, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
குறித்த வழக்கில், மனுதாரர்களான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் பிரசன்னமாகியிருந்ததுடன் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு விசாரணையை நடத்த சட்டத்தின் பிரகாரம் உரிமை இல்லை என எதிர்தரப்பு சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்ததுடன் விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
ஆட்சேபனையை பரிசீலித்த கௌரவ நீதிபதி அவர்கள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப விசாரணையை முறையாக நடத்த இஸ்லாமிய நம்பிக்கைகள் பற்றிய சரியான புரிதல் தேவை என்று குறிப்பிட்டார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் துறை (CID) அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களை ஒரு தனியார் சட்டத்தரணி வழிநடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்தரப்பு சட்டத்தரணியின் ஆட்சேபனையை கௌரவ நீதிபதி அவர்கள் நிராகரித்ததுடன் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களை வழக்குத் தொடர்வதற்கு அனுமதி வழங்கினார்.
குறித்த வழக்கானது 2025 ஆகஸ்ட் 25ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024.12.13 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
2025.01.28 அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை பற்றிய செய்தி:
– ACJU Media –



