அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் (SLBC) பணிப்பாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று 2026 ஜூலை 28 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இருதரப்பும் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்கள், ‘முஸ்லிம் சேவை’ வானொலி நிகழ்ச்சிகளின் முக்கியத்துவம் மற்றும் அதனுடனான முஸ்லிம் சமூகத்தின் ஈடுபாடு குறித்து சுட்டிக் காட்டியதுடன் இருதரப்பும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
அத்தோடு, இதனை முன்னெடுத்துச் செல்வதில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் பதில் தலைவர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
இதனையடுத்து, வானொலி தொடர் நிகழ்ச்சிகளுக்கான வளவாளர்களை பெறுவதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் துறை சார் பெண் வளவாளர்களை பெறுவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வருகை தந்திருந்த தயாரிப்பாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் பொருத்தமான வளவாளர்களைப் பெற ஜம்இய்யாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஆலிம்களை வானொலி நிகழ்ச்சிகளுக்கு பயிற்றுவிப்பது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இதில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர் சகோதரி பாத்திமா ரினோசியா தலைமையிலான நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், மற்றும் ஒலிபரப்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜம்இய்யா சார்பில், பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் மற்றும் அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.



– ACJU Media –


