நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தலைமையிலான அரசாங்க பிரதிநிதிகள் குழுவினர் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்-ஷைக் கௌரவ முனீர் முளப்பர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகள் குழுவினர் 2026 ஆகஸ்ட் 09 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.

நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விடயத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புதிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஜம்இய்யா தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமய விவகாரங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரிடையே பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரம், மூடப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த விவகாரம், சமய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்வது தொடர்பான விவகாரம், கொவிட் 19 காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் விவகாரம் மற்றும் அரச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது சுட்டிக் காட்டப்பட்டதுடன் அவற்றிற்கான உரிய தீர்வுகளை பெறுவது குறித்தும் பேசப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களுக்கு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட முக்கிய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உப தலைவர் அஷ்-ஷைக் உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன