புனித ரமழான் மாதத்தின் உச்ச பயனை அடைவதற்கான மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் கதீப்மார்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவின் வழிகாட்டல்

2026.02.12
1447.08.23

ஒவ்வொரு வருடமும் புனித ரமழான் மாதம் நம்மை கடந்து சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த ரமழான் மாதத்தின் உச்ச பயனை நாம் அடைந்து கொண்டோமா? அதிலிருந்து நாம் எவ்வளவு ஆன்மீக பலனை பெற்றுக் கொண்டோம்? மேலும் முன்னோக்கிக் கொண்டிருக்கும் ரமழானை இன்னும் சிறப்பாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் கருத்திற் கொண்டு ஒவ்வொருவரும் சீரிய சுய பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு (லைலத்துல் கத்ர்) அடங்கிய, அல்லாஹ்வை நெருங்குவதற்கான பல வழிகளையும் வாய்ப்புகளையும் கொண்ட நன்மைகளின் பருவ காலமான புனித ரமழான் மாதத்தை உரிய திட்டமிடலின்றி வீணாகக் கழிப்பது ஒரு பெரிய இழப்பாகும். அன்பு நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘لا عقل كالتدبير’ திட்டமிடலை விட புத்திசாலிதனம் வேறில்லை. அதன் அடிப்படையில் வருகிற ரமழானை திட்டமிட்டு, முறையாக பயன்படுத்தி உச்ச பலன்களையும் நன்மைகளையும் அடையும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சாரக் குழுவின் வழிகாட்டல்கள் பின்வரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல் மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் கதீப்மார்களை இலக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நோக்கம்:
• புனித ரமழான் மாதத்தை இலக்கு நோக்கியதாக (பயனுள்ளதாக) பயன்படுத்த உதவுதல்.
• ஒவ்வொருவருக்கும் சுய பரிசோதனை செய்ய வழிகாட்டுதல்.
• ஆன்மீக வளர்ச்சிக்கான தெளிவான திட்டமிடலை உருவாக்குதல்.

ரமழான் மாதத்தில் மஸ்ஜித்களின் முக்கிய வேலைகள்:
1. இபாதத் மற்றும் ஆன்மீக வழிகாட்டல்:
• புனித ரமழான் மாதத்தை வரவேற்று பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
• தராவீஹ் மற்றும் இரவு தொழுகைகளை நடாத்துதல்.
• மஸ்திதை அண்மித்துள்ள பாடசாலை அதிபருடன் இணைந்து விடுமுறைக்கு முன் பயான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
• அல்-குர்ஆனை ஓத ஊக்குவித்தல்.
• இஃதிகாஃப் ஏற்பாடு செய்தல்.
• ஸஹர் இப்தார் நேரங்களில் மனமுருகி துஆ செய்ய மக்களை ஊக்கப்படுத்துதல்.
• ரமழான் மாதத்திற்கு முன்பு எமது மஹல்லாவில் குறிப்பிட்ட அல்-குர்ஆன் தமாம் எண்ணிக்கையை முடிவெடுத்து அதனை பூர்த்தியாக்க ஆர்வம் காட்டல்.

2. புனித அல்-குர்ஆன் மற்றும் தஃவா வழிகாட்டல்:
• புனித அல் குர்ஆனை சரியாக முறை பேணி ஓதப் பழகும் ஹல்காக்களை ஏற்பாடு செய்தல்.
• புனித அல் குர்ஆனை மனனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
• நோன்பு மற்றும் அத்தியாவசிய மார்க்க சட்ட திட்டங்களை சரியாக அறிந்து கொள்ள சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்தல்.
• புனித அல்-குர்ஆனை சரியாக அதன் விளக்கத்துடன் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தல்.
• குறிப்பிட்ட சில ஹதீஸ்களையேனும் அதன் விளக்கத்துடன் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தல்.
• பெண்களுக்கு மார்க்க விடயங்களை கேட்டு விளக்கம் பெற பெட்டியொன்றை வைத்தல்.

3. சமூக சேவை:
• சிறார்களுக்கு மத்தியில் போட்டிகளை அறிமுகப்படுத்தல்.
▣ அல்-குர்ஆன் மனனப் போட்டி
▣ அல்-ஹதீஸ் மனனப் போட்டி
▣ சந்தர்ப்ப துஆக்கள் மனனப் போட்டி
▣ கேள்வி பதில்
பெண் பிள்ளைகளுக்கும் முறைகளைப் பேணி ஏற்பாடு செய்தல்.

• சிறார்களின் முஹாஸபாவை அடிப்படையாக வைத்து பரிசில்களை வழங்கல்.
• தேவையுள்ளவர்களுக்கும் பிரயாணிகளுக்கும் இப்தார் ஏற்பாடு செய்தல்.
• மஹல்லாவில் உள்ள ஏழை எளியவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுதல்.
• மக்கள் விரக்தியடையாதவாறு ஒலிபெருக்கி மற்றும் வாகன தரிப்பிடங்களை அமைத்துக் கொள்ளல்.

4. மஸ்ஜித்களுக்கு வரும் விருந்தாளிகளுக்காக மஸ்ஜிதை அலங்கரித்தல்:
• ரமழான் மாதம் மக்கள் அதிகமாக வந்து செல்லும் காலம் அதை சுத்தமாக வைத்து கொள்ளல்.
• பெண்களுக்கான ஏற்பாடுகளை முறையாக செய்து கொடுத்தல்.
• கடைசி பத்து நாட்களில் சிறப்பு கவனம் செலுத்தல்.
• இஃதிகாஃப் தரிப்பவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.

– பிரச்சாரக் குழு –

Related Posts

1 thought on “புனித ரமழான் மாதத்தின் உச்ச பயனை அடைவதற்கான மஸ்ஜித் நிர்வாகங்கள் மற்றும் கதீப்மார்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுவின் வழிகாட்டல்”

  1. ”இந்த நிகழ்ச்சிகளை மஸ்ஜிதில் வழமையாக நடைபெறும் நிகழ்வுகளுக்கு பாதிப்பில்லாமல் நடத்த வேண்டும்” என்பதை கட்டாயம் குறிப்பிடவும்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன