இறக்குமதி செய்யப்படும் அல்-குர்ஆன் பிரதிகள், மொழிபெயர்ப்புகள், அரபு, இஸ்லாமிய நூல்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நிலைப்பாடுகளும்

ACJU/NGS/2024/359
2024.08.01 (1446.01.25)

கடந்த சில ஆண்டுகளாக அல்-குர்ஆன் பற்றிய விமர்சனங்களும் தப்பான அர்த்தங்களைச் சித்தரித்தலும் அதன் சில வசனங்களே, தீவிரவாதத்தைத் தூண்டுவதாகவும் ஈஸ்டர் தாக்குதல் நடைபெறுவதற்கும் காரணமாக அமைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு, ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் 2019 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு எந்த விதமான அல்-குர்ஆன், அரபு, இஸ்லாமிய நூல்களையும் கொண்டுவரமுடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. எனினும் இத்தடையினைத் தளர்த்துவதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளில் ஜம்இய்யாவும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தொடர்ந்தும் முயற்சித்து வந்துள்ளனர்.

இறக்குமதியாளர்கள், பயனாளர்களின் தொடரான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கௌரவ ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இன்னும் பல உயர்மட்டத் தரப்பினைரையும் தொடர்பு கொண்டு முயற்சித்ததன் பயனாக, துறைமுகத்தில் தேங்கியிருந்த பல நூல்களை வெளிக்கொணரும் பணியினை மேற்கொண்டுவந்தது.

அதே கட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கலாச்சார அமைச்சின் பரிந்துரைகள் அடங்கலான கட்டுப்பாடுகளுடன் கூடிய பொறிமுறையுடன் ஒரு மீளாய்வுக் குழுவினை 2021 ஆம் ஆண்டில் அப்போதையத் திணைக்களப் பணிப்பாளர் நியமித்தார்.

அன்று முதல் அக்குழு செயற்பட்டு, பல்லாயிரம் அல் குர்ஆன் பிரதிகளையும் அத்தியாவசிய அரபு நூல்களையும் பரிந்துரை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமாவின் பிரதிநிதிகளுடன், திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்கள், இலங்கை வக்ஃபு சபையின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர். அக்குழு அதற்கான விதிகளின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் 2024.05.16 ஆம் திகதி சஊதி அரேபியாவில் இருந்து அல்-ஹாஜ் எம்.ஆர்.எம். சாதிஹான் ஸைலானி (சாதிக் ஹாஜியார்) அவர்களினால் 25,000 அல்-குர்ஆன் பிரதிகளும் 15,600 அல் குர்ஆன் தர்ஜமாக்களும் ‘இறுதி மூன்று பாகங்களுக்கான மொழிபெயர்ப்புடன் அகீதா, பிக்ஹுச் சட்ட விளக்கங்கள்’ அடங்கிய 9,720 தமிழ் பிரதிகளும், 1,200 சிங்களப் பிரதிகளும் அடங்கிய கொள்கலன் அனுப்பப்பட்டுள்ளன.

இவை அனுப்பப்பட முன்னரே 2024.05.15 ஆம் திகதி இவற்றை விடுவிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புகளைத் தந்துதவுமாறு வட்சப் ஊடாக அல்ஹாஜ் சாதிக் அவர்கள் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே, மேற்படி மொழிபெயர்ப்புக்கள் இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக 2024.05.20 ஆம் திகதி ஓர் அவசரக் கலந்துரையாடல் ஒன்று தலைமையகத்தில் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு கௌரவ புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர், திணைக்களப் பணிப்பாளர், முன்னாள் ஆளுனர் அல்-ஹாஜ் அஸாத் ஸாலி, ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னா முஹம்மதிய்யா, ஜம்இய்யத்துஷ் ஷபாப் அமைப்பினர் போன்றோர் அழைக்கப்பட்டு, கலந்துகொண்டோருக்குப் பூரணத் தெளிவுகள் வழங்கப்பட்டன.

அல்-ஹாஜ் சாதிக் அவர்கள் இலங்கை வருகைதந்திருந்த செய்தி கிட்டவே, நாமே முன்வந்து அவரை அழைத்துக் கடந்த 2024.07.11 ஆம் திகதி ஏலவே நடைபெற்றமை போன்று பூரணத் தெளிவுகள் வழங்கப்பட்டு, மிகுந்த தெளிவுகளுடன் அக்கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

எனினும், அதன் பின்னரும் அவை விடுவிக்கப்படாது, சுங்கத்தில் தேங்கியிருப்பது கண்டு, பதில் பணிப்பாளராகப் பணியாற்றிய எம்.எச்.ஏ.எம். ரிப்லான் அவர்களுக்கு 2024.07.24 ஆம் திகதி அல்-ஹாஜ் சாதிக் அவர்கள் கடிதம் அனுப்பியிருந்தார். அதன் பிரதியை எமக்கும் அனுப்பியிருந்தார். அதில், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்ரமநாயக்க, அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.இஸட்.எம். பைசல் ஆகியோரது சம்மதத்துடனேயே இவ் அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புகள் அடங்கிய கொள்கலனை அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இதன் பின்னர் இவ்வாறாக இறக்குமதி செய்பவர்கள் இறக்குமதி செய்வதற்கு வழிகாட்டப்பட்டிருக்கும் அப்பொறிமுறைகளைப் பின்பற்றும் பொழுது, அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு மாற்றமாக செயற்படும் பொழுது நிச்சயமாக அது சிரமமாக அமையும்.

ஆகவே இவ்விடயத்தை முறையாக அனுகி காரியங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், எமது நாட்டில் எந்த சமூகத்திற்கும் இல்லாத இந்நடைமுறை முழுமையாக நீக்கப்படல் வேண்டும் அல்லது நெகிழ்வுத் தன்மை பேணப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறோம் என்பதையும் அன்புடன் நினைவூட்டிக் கொள்கிறோம்.

குறிப்பு : அல்-குர்ஆன் பிரதிகளை இறக்குமதி செய்வதற்கு எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லை. மாறாக மொழிபெயர்ப்புகளுக்கும் ஏனைய நூல்களுக்குமே இக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அல்-குர்ஆன் மொழிபெயர்ப்புகளையும் குறிப்பிட்ட வசனங்களுக்குரிய விளக்கங்களுடன் கொண்டுவரப்படும் பொழுது, அதன் கட்டுப்பாடுகளும் நீங்கிவிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முஃப்தி எம். ஐ. எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன